வீட்டுக் கதவைத் தட்டிய மர்ம நபர்கள்; விட்டுச் சென்றது கைக்குண்டு!

எல்ல – வெள்ளவாய பிரதான வீதியின் கரந்தகொல பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட கைக்குண்டை, பண்டாரவளை நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இன்று செயலிழக்கச் செய்து பாதுகாப்பாக அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விசேட அதிரடிப்படையினர் முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த வீட்டுக்கு நேற்று (21) அதிகாலை இனந்தெரியாத குழுவினர் வருகை தந்து, வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். தங்களைப் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்ட அவர்கள், கதவைத் திறக்குமாறு சத்தமிட்டு கூச்சலிட்டுள்ளனர்.
இதனால் அச்சமடைந்த வீட்டிலிருந்தவர்கள் கதவைத் திறக்கவில்லை. பின்னர், சம்பவம் தொடர்பில் எல்ல பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தபோது, வீட்டில் கைவிடப்பட்ட நிலையில் வெடிக்காத கைக்குண்டு ஒன்று காணப்பட்டதை கண்டறிந்துள்ளனர்.
அதிகாலை வீட்டுக்கு வந்து கதவைத் திறக்குமாறு மிரட்டிய இனந்தெரியாத குழுவினரே குறித்த கைக்குண்டைக் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் குடும்பத்தினரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.