வீதிகளில் வாசிக்க முடியாத பெயர்ப் பலகைகள்
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் பிரதான வீதிகளின் இருமருங்கிலும் நடப்பட்டுள்ள ஊர்களின் பெயர்களைத் தாங்கிய விளம்பரப் பலகைகள் மற்றும் வழிகாட்டிப் பலகைகள், வீதிகளில் பயணிப்போர் இலகுவாக வாசிப்பதற்கு ஏற்ற வகையில் தெளிவாக இல்லை எனப் பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தின் பிரதான வீதிகள் மற்றும் கரையோரப் பிரதேசங்களை இணைக்கும் முக்கிய வீதிகளில் நடப்பட்டுள்ள பெரும்பாலான பெயர்ப் பலகைகளில் எழுத்துக்கள் மிகவும் சிறியதாகவும், நிறங்கள் மங்கிய நிலையிலும் காணப்படுகின்றன.
அதுமட்டுமன்றி, இரவு வேளைகளில் வெளிச்சத்தைப் பிரதிபலிக்கும் (Reflective) தன்மையற்ற வகையில் இவை அமைக்கப்பட்டுள்ளதால், இரவு நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டுநர்கள் ஊர்களின் பெயர்களையும் தூரங்களையும் அடையாளம் காண்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக, புதிய இடங்களுக்குப் பயணம் செய்யும் வெளியூர் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள், ஊர்களின் எல்லைகளையும் பெயர்களையும் சரியாக அடையாளம் காண முடியாமல் வழியறியாது தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
பல இடங்களில் பெயர்ப் பலகைகள் முறையான பராமரிப்பின்றிப் பொலிவிழந்து காணப்படுவதோடு, சில இடங்களில் வீதியோர மரங்களின் கிளைகளினாலும் புதர்களினாலும் மறைக்கப்பட்டு வாசிக்க முடியாத வகையில் காட்சியளிக்கின்றன.
வாகனங்களை அதிவேகமாகச் செலுத்திச் செல்லும்போது, தெளிவற்ற பெயர்ப் பலகைகளை உற்றுநோக்க முற்படுவதால் ஓட்டுநர்களின் கவனம் சிதறி விபத்துகள் நிகழும் அபாயமும் காணப்படுகின்றது.
எனவே, பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வீதி அபிவிருத்தி அதிகார சபை இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, தெளிவற்ற மற்றும் சேதமடைந்த பெயர்ப் பலகைகளை அகற்றிவிட்டு, தூரத்திலிருந்து பார்த்தாலும் தெளிவாகத் தெரியக்கூடிய வகையிலான புதிய வழிகாட்டிப் பலகைகளைப் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்களும் வாகன ஓட்டுநர்களும் அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Comments 0
Be the first to comment.