—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அக்குறணை விபத்தில் நால்வர் பலி

அக்குறணை விபத்தில் நால்வர் பலி

கண்டி – மாத்தளை A-9 வீதியில், அக்குறணை 7ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த நால்வரின் அடையாளங்களும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த சீமெந்து தூள் ஏற்றிய பல்கர் ரக வாகனம், சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற பல வாகனங்களுடன் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவரும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆண் ஒருவரும், மாத்தளை பகுதியைச் சேர்ந்த 16 வயதுடைய யுவதியும், அக்குறணை பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஆறு பேர் கண்டி மற்றும் அக்குறணை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் பிரேதப் பரிசோதனைகள் கண்டி வைத்தியசாலையில் நடத்தப்பட்ட பின்னர், சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விபத்துடன் தொடர்புடைய கல்கமுவை பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய பல்கர் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் இன்று (20) கண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். சம்பவம் தொடர்பில் அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவர் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் நிஹால் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த இருவரும் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், ஏனைய மூவரின் நிலை ஆபத்தானதாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் அடங்குகின்றனர்.

தனது வாகனத்தின் பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்தமையாலேயே விபத்து நேர்ந்ததாகக் கைது செய்யப்பட்ட சாரதி தெரிவித்துள்ளதாக, போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சேனாதீர தெரிவித்துள்ளார்.

வாகனம் முதலில் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதுடன், அந்த மோட்டார் சைக்கிள் சுமார் 160 மீற்றர் தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், நான்கு முச்சக்கரவண்டிகள் மற்றும் இரண்டு டிப்பர் வாகனங்கள் உள்ளிட்ட மொத்தம் எட்டு வாகனங்களுடன் சீமெந்து ஏற்றிய பல்கர் வாகனம் மோதியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சந்தேகநபரான சாரதி திருகோணமலையிலிருந்து சீமெந்து ஏற்றிவந்ததாகவும், விபத்து இடம்பெற்றபோது அவர் மதுபோதையில் இருக்கவில்லை என்பது பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதி பொலிஸ் மா அதிபர் கூறியுள்ளார்.

எனினும், சாரதிக்கு நித்திரை ஏற்பட்டமையால் விபத்து நேர்ந்ததா என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.