—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாடளாவிய மின்வெட்டு தொடரும்

நுரைச்சோலை லக்விஜய அனல் மின்நிலையம் செயலிழந்துள்ளதால், இன்றும் (20) நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்தின் (National System Operator) கோரிக்கைக்கு அமைய இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நேற்று (19) தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரையான காலப்பகுதியில், நாடளாவிய ரீதியில் நான்கு வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, சுழற்சி முறையில் தலா ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

எனினும், வைத்தியசாலைகள் மற்றும் அத்தியாவசிய சேவை மையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட திடீர் மின்சாரத் தடையைத் தொடர்ந்து, நுரைச்சோலை லக்விஜய மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களும் முழுமையாகச் செயலிழந்துள்ளன.

இதனால் தேசிய மின்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நோக்கில், தினமும் ஒரு மணிநேர மின்வெட்டை அமுல்படுத்த தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நேற்று நாடளாவிய ரீதியில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட்ட நிலையில், இன்றும் நாளையும் (21) மின்வெட்டு தொடரும் என தேசிய கட்டமைப்பு செயற்பாட்டாளர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி புத்திக சமரசேகர தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.