—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அடக்குமுறைக்கு எதிராக சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அடக்குமுறைக்கு எதிராக சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை

அரசு ஜனநாயக வரம்புகளுக்குள் செயற்பட்டால் மக்களிடமிருந்தும் ஜனநாயக ரீதியான பதில்களே கிடைக்கும் என்றும், அதற்கு மாறாக அடக்குமுறைகளைக் கையாண்டால் கொடூரமான எதிர்வினைகள் உருவாகும் என்றும் ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைச் சட்டங்களை நீக்கி, மக்களின் சிவில் உரிமைகளையும் மனிதக் கண்ணியத்தையும் பாதுகாப்பதாக உறுதியளித்திருந்தது என அவர் தெரிவித்தார்.

இருப்பினும், தற்போது ‘அரசைப் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சட்டமூலம்’ ஆகியவற்றை அரசு கொண்டுவர முனைவது, கடந்தகாலக் கசப்பான அனுபவங்களை நினைவூட்டி நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கை கடந்த காலத்தில் சந்தித்த ஆயுதக் கிளர்ச்சிகள், பிரிவினைவாதப் போர் மற்றும் பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாகப் பல்லாயிரக்கணக்கான உயிர்களையும் சொத்துக்களையும் இழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

போரின்போது பாதுகாப்புப் படையினர் 26 ஆயிரம் பேரும், விடுதலைப் புலிகள் தரப்பில் 23 ஆயிரம் பேரும் உ**யிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

1979ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பயங்கரவாதத் தடைச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்ததாகக் குறிப்பிட்ட அவர், நாட்டில் ஏற்கனவே போதுமான குற்றவியல் சட்டங்கள் இருக்கும்போது மீண்டும் புதிய அடக்குமுறைச் சட்டங்கள் எதற்காகக் கொண்டுவரப்படுகின்றன என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

1989ஆம் ஆண்டு காசல் வீதியில் வைத்து தான் கைது செய்யப்பட்டதாகவும், கொழும்புப் பல்கலைக்கழகச் சட்டப்பீட மாணவர்களுடன் இணைந்து மூன்று மாதங்களுக்கும் மேலாகக் கண்கள் கட்டப்பட்ட நிலையில் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

மக்களின் துயரங்களையும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளையும் முன்வைத்து ஆட்சிக்கு வந்த தற்போதைய ஆட்சியாளர்கள், அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்காக இத்தகைய கடுமையான சட்டங்களைக் கொண்டுவந்து புதிய தலைமுறையினரை அச்சுறுத்தக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்தகாலக் கொ**லைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு நீதியை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதைவிடுத்து, ஜனநாயக வழியில் நடைபெறும் வேலைநிறுத்தங்களையும் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டங்களையும் அடக்குமுறையால் எதிர்கொள்ள அரசு முனைந்தால், அது மேலும் பாரிய மோதல்களுக்கே வழிவகுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

எனவே, அரசு உடனடியாக ஜனநாயக வரம்புகளுக்குள் திரும்ப வேண்டும் என பாட்டலி சம்பிக்க ரணவக்க வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.