—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஞானசாரர் விவகாரத்தில் கடும் சாடல்

ஞானசாரர் விவகாரத்தில் கடும் சாடல்

மக்களால் நேரடியாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவைச் சந்தித்து தங்களது பிரச்சினைகளையும் துயரங்களையும் தெரிவிக்க முடியாத சூழ்நிலையே நாட்டில் காணப்படுவதாக ஸ்ரீ சமந்தபத்ர தேரர் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சென்று, மக்களை நோக்கிக் கையசைத்துவிட்டுத் திரும்புவதாகவும், மக்களின் துயரங்களுக்குச் செவிசாய்க்கும் உண்மையான தலைமைத்துவம் நாட்டில் இல்லை என்றும் அவர் சாடியுள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், கிராமங்களுக்குச் செல்லும்போது உண்பதற்குக்கூட உணவின்றி நாளொன்றுக்கு இருவேளை மட்டுமே உண்ணும் ஏழை மக்கள் தங்களைச் சூழ்ந்துகொண்டு தமது அவலங்களை எடுத்துரைப்பதாகக் கூறினார். மக்கள் தெரிவிக்கும் இத்தகைய நியாயமான அழுகுரல்களைத் தங்களால் நிராகரிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் தலைவர்களே மக்களுக்குச் செவிமடுத்துப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய ஆட்சியாளர்களிடம் அத்தகைய அணுகுமுறையைக் காண முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து வருகை தந்த சுவாமி ஒருவரை உலங்கு வானூர்திகளில் ஏற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அழைத்துச் செல்வதால் சுற்றுலாத்துறையை மேம்படுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த முறையான திட்டங்கள் அவசியமே தவிர, வெளிநாட்டுச் சுவாமிமாரை அழைத்து வந்து அனுராதபுரத்தைக் காண்பிப்பது தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.

உலக நாடுகள் மதிக்கும் வகையில் ஜனநாயகம், தனிமனித உரிமை மற்றும் சுதந்திரத்தைப் பேணிச் செயற்பட அரசு தவறினால், நாடு பெரும் பின்னடைவைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

சமகாலத்தில் ஞானசார தேரரின் விடுதலை விவகாரத்தில் அரசு அலட்சியமாகச் செயற்பட்டமையாலேயே அது தற்போது பெரும் போராட்டமாகவும் மோதலாகவும் உருவெடுத்துள்ளதாகவும் ஸ்ரீ சமந்தபத்ர தேரர் தெரிவித்தார்.

மக்கள் தமது மன அழுத்தங்களையும் அதிருப்திகளையும் வெளிப்படுத்தும்போது, அவற்றை அடக்குமுறையால் ஒடுக்க முனையாமல் ஆரம்பத்திலேயே தீர்க்க முற்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

“நகத்தால் வெட்டக்கூடிய ஒரு பிரச்சினையைக் கோடரியால் வெட்டும் நிலைக்குக் கொண்டுசெல்லக் கூடாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் நிலவும் உணவுப் பற்றாக்குறை, பொருள்களின் கடுமையான விலை அதிகரிப்பு மற்றும் எரிவாயுத் தட்டுப்பாடு உள்ளிட்ட மக்களின் அன்றாட அடிப்படைப் பிரச்சினைகளுக்கு அரசு உடனடியாகத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

மக்களின் குரல்களைப் புறக்கணிக்காமல், அவர்களது துன்ப நிலைகளைப் புரிந்துகொண்டு ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனத்துடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் செயற்பட முன்வர வேண்டும் என்றும் ஸ்ரீ சமந்தபத்ர தேரர் வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.