—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்ட குடும்பங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 17 ஆண்டுகளாகத் தற்காலிக வீடுகளில் சொல்லொணாத் துன்பங்களை எதிர்கொண்டு வரும் குடும்பங்கள், கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்ட நிலையிலும், டித்வா வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் தற்போது ஆரம்பித்துள்ள பருவமழைக் காலத்திலும் அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காகக் கிடைத்த 50 இலட்சம் ரூபா பெறுமதியான வீட்டுத்திட்டப் பயனாளிகளைத் தெரிவுசெய்யும் நடவடிக்கையில், ஏற்கனவே பல்வேறு திட்டங்களின் ஊடாக நிரந்தர வீடுகளைப் பெற்று அவற்றைப் பூர்த்திசெய்து குடியிருந்து வருபவர்களுக்கும், டித்வா புயலால் பாதிக்கப்படாதவர்களுக்கும் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

கிராம அலுவலர்களின் இவ்வாறான முறைகேடுகள் காரணமாக அதிகளவான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தற்காலிக வீடுகளில் வாழ்வோரும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்ட காலத்திலிருந்து இன்றுவரை எந்தவொரு வீட்டுத்திட்டத்தையும் பெற்றுக்கொள்ளாத பல குடும்பங்கள், சுமார் 17 ஆண்டுகளாகத் தற்காலிக வீடுகளில் சொல்லொணாத் துன்பங்களை அனுபவித்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயலாலும் பாதிக்கப்பட்ட இக்குடும்பங்கள், வீட்டுத்திட்டத்தில் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் தற்போது ஆரம்பித்துள்ள பருவமழையிலும் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றன.

கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன், கோரக்கன் கட்டு, புளியம்பொக்கணை, ஆனைவிழுந்தான் மற்றும் ஆனந்தபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் இதுவரை நிரந்தர வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்ளாத பெருமளவான குடும்பங்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலும் தற்காலிக வீடுகளிலும் நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றன.

இவ்வாறான குடும்பங்களுக்கு வீட்டுத்திட்டங்களை வழங்காமல், குறித்த பகுதிகளில் ஏற்கனவே நிரந்தர வீட்டுத்திட்டங்களைப் பெற்று, அவற்றைப் பூர்த்திசெய்து வீடுகளில் குடியிருந்து வரும் குடும்பங்கள், தனிநபர்கள் மற்றும் முதியோர் தெரிவுசெய்யப்பட்டு, முறைகேடான விதத்தில் வீட்டுத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.