ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகைக்கு ஆபத்து

அரசால் அவசர அவசரமாகக் கொண்டுவரப்படும் 'பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலம்' காரணமாக, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வரும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை நாடு முற்றாக இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் சுட்டிக்காட்டினார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்தக் கடுமையான எச்சரிக்கையை விடுத்தார்.
ஊடக சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய சீலரத்ன தேரர்,
"தற்போதைய அரசு மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதிலும், அவர்களின் பொருளாதாரத் துன்பங்களைப் புரிந்துகொண்டு உதவுவதிலும் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, அவசர அவசரமாகப் பல்வேறு அடக்குமுறைச் சட்டங்களைக் கொண்டுவருவதிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் காரணமாக இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை இல்லாது போனால், நாட்டின் பொருளாதாரத்தை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது? ஏற்கனவே வரிகளால் பீடிக்கப்பட்டுள்ள மக்கள் மீது ஜி.எஸ்.பி. இழப்பும் விழுந்தால், நாட்டின் ஏற்றுமதித் துறைக்கும் பொருளாதாரத்திற்கும் ஏற்படும் பேரழிவிற்கு யார் பொறுப்பேற்பது? அரசு தனது குறைகளை மறைப்பதற்காகவே இவ்வாறான சட்டங்களைக் கொண்டுவருகிறதா என்ற கேள்வி எழுகின்றது" என்றார்.
புதிய சட்டங்கள் மூலம் இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரம் பறிக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர்,
"இவ்வாறான கட்டுப்பாட்டுச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்போது இளைஞர்களின் தனிப்பட்ட சுதந்திரம் கடுமையாகப் பாதிக்கப்படும்.
இளைஞர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப ஆடை அணிவது, தலைமுடியை அலங்கரிப்பது, இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது மற்றும் நடனமாடுவது போன்ற இயல்பான கலைச் செயற்பாடுகள்கூடக் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளது.
ஹோமாகம பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் உ**யிரிழந்த சம்பவத்தை இதனுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும். இந்தப் புதிய சட்டங்கள் நடைமுறைக்கு வராத நிலையிலேயே, பொலிஸ் காவலில் எலும்புகள் முறியும் அளவுக்குத் தாக்குதல் நடத்தப்பட்டு இளைஞர் ஒருவர் கொ**ல்லப்பட்டுள்ளார்.
யாருடைய உத்தரவின் பேரில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது என்பது குறித்துச் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்.
ஒருவர் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது. எனவே, நாட்டின் பொருளாதாரத்தையும் ஜனநாயகத்தையும் பாதிக்கும் இப்புதிய சட்டமூலத்தை அவசரமாகக் கொண்டுவராமல், நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று உடனடியாக நிறுத்த வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

Comments 0
Be the first to comment.