—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அடிப்படை உரிமைகள் குறித்து சஜித் குற்றச்சாட்டு

அடிப்படை உரிமைகள் குறித்து சஜித் குற்றச்சாட்டு

அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்காகவே அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை வழங்கப்பட்ட போதிலும், அதற்கு மாறாக மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் நடவடிக்கைகளையே இந்த அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“விகாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினரின் தலைமையில் மக்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது, அரசமைப்பின் 14ஆம் பிரிவின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமையாகும்.

இந்த உரிமையைத் தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்று, நாகரிகமற்ற முறையில் அவர்களை வெளியேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பேச்சுச் சுதந்திரத்தையும் ஒன்றுகூடும் சுதந்திரத்தையும் அரசாங்கம் பாதுகாக்க வேண்டும்.

வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள ‘பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்’ மற்றும் ‘ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுக்கும் சட்டமூலம்’ ஆகியவை நிறைவேற்று அதிகாரத்துக்கு எல்லையற்ற அதிகாரங்களை வழங்குகின்றன.

குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்ட வரைவுக்கும் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட வரைவுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் காணப்படுகின்றன.

கட்டாய விளக்கமறியலும் பிணை வழங்குவதில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளும் மனித உரிமைகளை மீறுகின்றன.

புதிய சட்டங்களின் கீழ், அனுமதியின்றிப் பாடும் இளம் இசைக்குழுவினரும் தோற்றத்தின் அடிப்படையில் இளைஞர்களும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளாகச் சித்திரிக்கப்படும் அபாயம் உள்ளது. எனவே, தேசிய பாதுகாப்புச் சட்டங்கள் சர்வதேசத் தரங்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட வேண்டும்.

80 ஆயிரம் வேலையற்ற பட்டதாரிகளுக்கும் 16 ஆயிரம் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை அரசாங்கம் மீறிவிட்டது. அவர்களுக்கான வேலைவாய்ப்பு உரிமையை உடனடியாக வழங்க வேண்டும்” என்றார்.

அத்துடன், புதிய வெறிநாய்க்கடி எதிர்ப்புச் சட்டமூலத்தில் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டிய அவர், சுகாதார மற்றும் கால்நடை மருத்துவத் துறைகளை ஒருங்கிணைத்து உரிய பொறிமுறையை முன்னெடுக்குமாறும் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.