ஞானசாரர் விடுதலை ஏன் தாமதம்?

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞானசார தேரருக்குப் பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால், அவர் தமது தண்டனைக் காலத்தைப் பூர்த்தி செய்து இந்நேரம் விடுதலையாகியிருப்பார் என்றும், ஜனாதிபதி வழங்கிய பொதுமன்னிப்பில் தவறுகள் இருந்தால் அதற்கு ஞானசார தேரர் பொறுப்பாக முடியாது என்றும் புதிய ஜனநாயக முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வெறிநாய்க்கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களைப் பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு, நீதிமன்ற அவமதிப்புக் குற்றத்துக்காக 2017ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த ரோஹித அபேகுணவர்தன, தண்டனைக் காலத்தில் ஞானசார தேரர் எந்தவொரு அரசிடமும் பொதுமன்னிப்புக் கோரவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தார் என்றும், அந்தப் பொதுமன்னிப்பை உயர்நீதிமன்றம் தற்போது இரத்துச் செய்ததைத் தொடர்ந்து ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.
மைத்திரிபால சிறிசேன அன்று பொதுமன்னிப்பு வழங்காமல் இருந்திருந்தால், ஞானசார தேரர் 2024 அல்லது 2025ஆம் ஆண்டிலேயே தமது தண்டனைக் காலத்தை நிறைவு செய்து விடுதலையாகியிருப்பார் என்றும் ரோஹித அபேகுணவர்தன குறிப்பிட்டார்.
ஜனாதிபதி செயலகம் இழைத்த தவறுக்காக ஞானசார தேரர் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சுட்டிக்காட்டிய அவர், அரசமைப்பில் உள்ள ஏற்பாடுகளுக்கு அமைய ஜனாதிபதி இந்தத் தவறைத் திருத்தி, ஞானசார தேரருக்கு மீண்டும் பொதுமன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

Comments 0
Be the first to comment.