—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செம்மணி அறிக்கை; அடுத்தகட்ட நகர்வு எப்போது?

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாகச் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கை குறித்து, நீதிமன்ற உத்தரவுகளுக்கு அமைவாகவே அரசாங்கத்தின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் தயாரிக்கப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கை கடந்த 19ஆம் திகதி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரதிகளை இந்த விவகாரத்துடன் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்கமைய, சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிக்கையை முழுமையாக ஆராய்ந்து தமது கருத்துக்களையும் அவதானிப்புகளையும் நீதிமன்றத்தில் முன்வைப்பார்கள்.

இதற்கு மேலதிகமாக, அந்தப் பகுதியில் தோண்டி எடுக்கப்பட்ட மாதிரிகளின் பழமையைக் கண்டறிவதற்கான கார்பன் கால நிர்ணயச் சோதனையை மேற்கொள்ள அனுமதி கோரி குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளது.

இது தொடர்பான தனது தீர்மானத்தையும் உத்தரவையும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி அறிவிக்கவுள்ளது” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.