அதிகாரம் வந்தாலும் யாரையும் பழிவாங்காதீர் - சிறையில் உள்ள நாமலுக்கு மஹிந்த உருக்கமான கடிதம்

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு, அவரது தந்தையும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ ஆலோசனைகளும் அறிவுரைகளும் அடங்கிய உருக்கமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டி. வி. சானக ஊடாக இந்தக் கடிதம் நாமல் ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
"நீங்கள் (நாமல் ராஜபக்ஷ) 2010 ஆம் ஆண்டில் அரசியலில் பிரவேசிக்க என்னிடம் அனுமதி கோரியபோது, 'சிறை செல்வதற்கும் துயரங்களை அனுபவிப்பதற்கும் தயாராகவே அரசியலுக்கு வாருங்கள்' என நான் கூறிய அறிவுரை உங்களுக்கு நினைவிருக்கும்" என்று மஹிந்த ராஜபக்ஷ அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தான் அரசியலுக்கு வந்த ஆரம்ப காலத்தில் அன்றைய அரசால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டமையை நினைவுகூர்ந்துள்ள அவர், "அன்று எனது ஒரே நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே. யார் என்ன கூறினாலும் நீங்களும் நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்" என்றும் அந்தக் கடிதத்தில் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
நாமலுக்கான அந்தக் கடிதத்தில் மஹிந்த குறிப்பிட்டுள்ள முழு விவரம் வருமாறு:-
"அன்பார்ந்த நாமல்! நீங்கள் அரசியலில் பிரவேசிப்பதற்கு உத்தேசித்த 2010ஆம் ஆண்டில் என்னிடம் அனுமதி கோரியது உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகின்றேன். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் உங்களுக்குக் கூறிய அறிவுரையும் நினைவிருக்கும் என நினைக்கின்றேன்.
விருப்பமிருந்தால் அரசியலுக்கு வாருங்கள். ஆனால், சிறை செல்வதற்கும் துயரங்களை அனுபவிப்பதற்கும் தயாராகவே வாருங்கள். அதற்கு எனக்கு எந்தத் தடையும் இல்லை என்றேன்.
நான் அவ்வாறு கூறுவதற்குரிய காரணம், நான் அரசியலுக்கு வந்த சில காலத்திலேயே அன்றைய அரசால் அடிப்படையற்ற குற்றச்சாட்டுச் சுமத்தப்பட்டு நான் சிறையில் அடைக்கப்பட்டமையாகும். நீங்கள் அப்போது பிறக்கவில்லை. அன்றைக்கு எனது ஒரே நம்பிக்கை நீதிமன்றம் மட்டுமே. யார் என்ன கூறினாலும் நீங்களும் நீதிமன்றத்தின் மீது மட்டுமே நம்பிக்கை வையுங்கள்.
அம்மாவும் நானும் இந்த நாள்களில் நீங்கள் பிறந்த அதே நவலோக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோம். உங்களது சகோதரர்களான யோஷித மற்றும் ரோஹித இருவரும் எமது நலம் விசாரித்து வருகின்றனர்.
யோஷித மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளமை அவர் கடற்படையில் சேவையாற்றியமைக்காகும். நாம் அக்காலத்தில் வேலைவாய்ப்புகளை வழங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்களில் தற்போதைய அரசைச் சேர்ந்தவர்களின் இளைய பிள்ளைகளும் உள்ளடங்கியுள்ளனர் என்பது உங்களுக்கும் நினைவிருக்கும் என நம்புகின்றேன்.
எனினும், உங்களுக்கு அதிகாரம் உள்ள எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அவர்களைப் பழிவாங்கும் நோக்கில் செயற்பட வேண்டாம். பெற்றோர்கள் செய்யும் செயல்களுக்குப் பிள்ளைகள் பலியாகக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். பழிவாங்காதிருப்பதே ராஜபக்சக்களின் வழிமுறையும் பாரம்பரியமுமாகும்.
இந்த நாட்டின் துயருறும் இலட்சக்கணக்கான மக்களுக்கு நாட்டை மீட்டுக் கொடுத்த குற்றத்துக்காக ராஜபக்ஷக்கள் இந்தச் சமூகத்தைக் குற்றவாளியாகக் கருதுவதில்லை. நாம் வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட போதிலும், நாட்டின் மக்கள் நன்றியுணர்வுள்ள சமூகம் என எண்ணிச் செயற்படுங்கள். உங்களுக்குக் கடவுள் துணை!" - என்றுள்ளது.

Comments 0
Be the first to comment.