அநுர அரசுக்கு கோட்டா ஆட்சி எச்சரிக்கை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றதைப் போன்றே, தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கிக் கிளர்ந்தெழும் சூழல் உருவாகியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே, அரசின் தற்போதைய நிர்வாகப் போக்கு மற்றும் கொண்டுவரப்படவுள்ள புதிய சட்டமூலங்கள் குறித்து அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"தற்போதைய அரசின் நிர்வாக அணுகுமுறை முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது. நாட்டு மக்களுக்குத் தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் எவையும் உரிய முறையில் நிறைவேற்றப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் மத்தியில் அரசுக்கு எதிராகக் கடுமையான அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலை தொடர்ந்தால், எந்நேரத்திலும் இந்த அரசுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து வீதிக்கு வந்து போராடக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. கடந்த காலத்தில் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் வெடித்ததைப் போன்றதொரு மக்கள் எழுச்சிப் புரட்சிக்குரிய சூழல்தான் தற்போது இலங்கையில் உருவாகி வருகின்றது. இந்த நிலவரம் குறித்த புலனாய்வுத் தகவல்களை அரசு முன்கூட்டியே அறிந்திருக்கக்கூடும்" என்றார்.
அரசு கொண்டுவரத் துடிக்கும் புதிய சட்டங்களின் உண்மையான நோக்கம் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
"மக்கள் மத்தியில் எழும் இத்தகைய கோபத்தையும் போராட்டங்களையும் முறியடிப்பதற்காகவே, 'பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம்' போன்ற அடக்குமுறைச் சட்டங்கள் அவசரமாகக் கொண்டுவரப்படுகின்றன.
எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி முன்வருபவர்களைக் கைது செய்து அச்சுறுத்துவதன் மூலம், அரசுக்கு எதிராக எழும் எத்தகைய எதிர்ப்புக் குரல்களையும் முற்றிலுமாக ஒடுக்குவதே ஆட்சியாளர்களின் பிரதான நோக்கமாகும்" என்றார்.

Comments 0
Be the first to comment.