“பிரிந்து நின்றது போதும்!” – மட்டக்களப்பு எம்.பியின் அழைப்பு
இனரீதியாகவும் மொழி ரீதியாகவும் பிரிந்து நின்றது போதும். நாம் அனைவரும் ஒன்றிணைந்த இலங்கையர் என்ற உணர்வுடன் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அழைப்பு விடுத்துள்ளார்.
'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் 'தூய்மையான இலங்கை – அத்தம' தேசிய திட்டத்தின் கீழ், மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நிகழ்வு கூழாவடியில் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கூழாவடி பிரதான வீதியில் விசேட வடிகான் சுத்திகரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
இவ்வேலைத்திட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் தலைமையில் ஆரம்பமானது.
இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கந்தசாமி பிரபு முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டார்.
இந்த நடவடிக்கையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த், புனானை 23ஆவது படைப்பிரிவின் படைப்பிரிவுத் தளபதி, மட்டக்களப்பு இலங்கை விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி, மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் நா. தனஞ்செயன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது, நுளம்புகள் பெருகுவதற்கு ஏதுவான நிலையில் நீண்டகாலமாகத் தூய்மைப்படுத்தப்படாமல் இருந்த கூழாவடி பிரதான வீதியின் வடிகான்கள் சுத்தம் செய்யப்பட்டன.
இந்நிகழ்வில் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் எனப் பெருமளவானோர் கலந்துகொண்டு சிரமதானப் பணிகளை முன்னெடுத்தனர்.
இந்தத் திட்டத்தின் ஊடாகச் சுற்றுச்சூழலைத் தூய்மைப்படுத்துவதுடன், மக்களின் மனங்களிலும் தூய்மையான எண்ணங்களை ஏற்படுத்த முடியும் என நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இதன்போது தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.