—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அநுர அரசுக்கு சாமர சம்பத் பகிரங்க எச்சரிக்கை

அநுர அரசுக்கு சாமர சம்பத் பகிரங்க எச்சரிக்கை

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலை தற்போதைய அரசாங்கத்திற்கும் ஏற்படும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி உள்ளிட்ட தற்போதைய அரசாங்கத்தில் உள்ள பெரும்பான்மையானவர்கள் கடந்த காலங்களில் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

"அரசாங்கம் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாக்கும் சட்டமூலத்தைச் சமர்ப்பித்துள்ளது. 1988 - 1989 காலப்பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய அதிகமானவர்கள் இந்த அரசாங்கத்தில் இருக்கின்றார்கள்.

ஜனாதிபதி முதல் பலர் பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களாகவே இன்று ஆட்சி செய்கின்றனர். அவ்வாறிருக்க, பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்குச் சட்டம் எதற்கு எனக் கேட்கின்றோம்.

தற்போது பொலிஸாரால் கைது செய்யப்படுபவர்கள் 24 மணிநேரம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்ட பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.

ஆனால், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் 72 மணிநேரம் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்க முடியும். அவ்வாறு கைது செய்யப்படுபவர்களை 72 மணிநேரம் தடுத்து வைக்க நடவடிக்கை எடுத்தால், பொலிஸ் நிலையங்கள் பொதுமக்கள் மற்றும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைக்கப்படும் அபாயம் உள்ளது.

முன்னாள் பொலிஸ்மா அதிபர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் பலர் இன்று சிறையில் இருக்கின்றனர். அரசாங்கம் கூறும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் செய்ய முற்பட்டால், இதே நிலை தற்போதைய பொலிஸ் அதிகாரிகளுக்கும் ஏற்படும். எனவே, பொலிஸார் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டும்.

எனவே, இந்தச் சட்டமூலத்தை அரசாங்கம் உடனடியாக வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், இந்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், ஆறு மாதங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்திற்கு ஏற்பட்டதை விடவும் மோசமான நிலைமை ஏற்பட்டு, அனைவரும் வீட்டுக்குச் செல்ல வேண்டிய நிலை உருவாகும்" எனத் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.