அனுராதபுரத்தில் ஜனாதிபதி நேரில் ஆய்வு!
அனுராதபுரம் புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்பையும் புராதன மதப் பின்னணியையும் பாதுகாத்து, சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டப் பணிகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்திய அரசின் நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படவுள்ள இத்திட்டத்தின் மொத்த மதிப்பிடப்பட்ட செலவு 7.7 பில்லியன் ரூபாவாகும். இதற்கான அபிவிருத்திக் கட்டமைப்புத் திட்டம் தேசிய பௌதீக திட்டமிடல் திணைக்களத்தால் தயாரிக்கப்பட்டு வர்த்தமானி அறிவித்தலாக வெளியிடப்பட்டுள்ளது.
அனுராதபுரம் புனித நகரத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி, நடந்து சென்று அபிவிருத்திப் பணிகளுக்குரிய காணிகள் மற்றும் திட்ட வரைபடங்களைப் பார்வையிட்டதுடன், அதிகாரிகளுடன் கலந்துரையாடி பணிகளின் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.
புனித நகரத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று தடாகங்களைச் சுற்றியுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள், மேற்கு ஆராமய விகாரை வளாகத்தில் நடைபெறும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் ருவன்வெலிசாயவுக்கு அருகில் எட்டு ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்காக முன்மொழியப்பட்டுள்ள காணி ஆகியவற்றையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
புனித நகரத்தின் தொன்மையையும் மதப் பின்னணியையும் பாதுகாத்து அனைத்து அபிவிருத்திப் பணிகளையும் முன்னெடுப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் இணைந்து கலந்துரையாடித் தீர்வுகண்டு, பணிகளை விரைவுபடுத்துமாறு அறிவுறுத்தினார்.
இதன்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க ருவன்வெலிசாய மகா சாயவை வழிபட்டு ஜனாதிபதி ஆசி பெற்றார். ருவன்வெலிசாய விகாராதிபதி ஈதலவெட்டுணுவெவே ஞானதிலக்க நாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர்.
இந்த நிகழ்வில் புத்தசாசன மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, வட மத்திய மாகாண ஆளுநர் வசந்த ஜினதாச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா உள்ளிட்ட துறைசார் உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.