—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சுகாதார விதிமீறல்!

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள சிற்றுண்டிச்சாலைகளில் சுகாதார நடைமுறைகள் தொடர்ச்சியாகப் பின்பற்றப்படாததால், அவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதுடன், இரண்டு சிற்றுண்டிச்சாலைகளைத் தற்காலிகமாக மூடுமாறும் ஏறாவூர் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் இயங்கி வரும் மூன்று சிற்றுண்டிச்சாலைகள், சுகாதார அதிகாரிகளால் பலமுறை எச்சரிக்கைகள் மற்றும் அறிவித்தல்கள் வழங்கப்பட்ட போதிலும், உரிய சுகாதார நடைமுறைகளைப் பேணாமல் செயற்பட்டு வந்துள்ளன.

இதனையடுத்து, செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தைச் சேர்ந்த பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் குறித்த சிற்றுண்டிச்சாலைகளுக்கு எதிராக ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் எட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிவான், மூன்று சிற்றுண்டிச்சாலைகளுக்கும் சேர்த்து மொத்தம் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் (150,000 ரூபாய்) அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

மேலும், சுகாதாரக் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை, அவற்றில் இரண்டு சிற்றுண்டிச்சாலைகளையும் 14 நாட்களுக்குத் தற்காலிகமாக மூடி, திருத்தப் பணிகளை மேற்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதேவேளை, நுளம்புகள் பெருகும் வகையில் சூழலைச் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த நபர்களுக்கு எதிராக, வந்தாறுமூலை பொதுச் சுகாதாரப் பரிசோதகரால் 23.10.2026 அன்று ஏறாவூர் நீதிவான் நீதிமன்றத்தில் ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரணை செய்த நீதிவான், குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்ட ஐந்து பேருக்கும் தலா 10,000 ரூபாய் வீதம், மொத்தம் 50,000 ரூபாய் அபராதம் விதிக்குமாறு உத்தரவிட்டார்.

பொதுமக்களும் உணவக உரிமையாளர்களும் சுகாதார விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, சுற்றுப்புறச் சூழலைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் எனச் சுகாதாரப் பரிசோதகர்கள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.