—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இன்றைய வானிலை

இன்றைய வானிலை

வங்காள விரிகுடாவின் அந்தமான் தீவுகளின் வடக்குப் பகுதியில் காணப்படும் தாழ் அமுக்கப் பிரதேசம் தீவிரமடைந்து இன்று தாழ் அமுக்கமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது நாளை மேலும் தீவிரமடைந்து சக்திவாய்ந்த தாழ் அமுக்கமாக மாறி, மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி நகரும். நாளை மறுதினம் காலையில் வங்காள விரிகுடாவின் மத்திய மேற்குப் பகுதியில் சூறாவளியாக வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து வரும் இரண்டு நாட்களில் இந்தியாவின் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசத்தின் வடக்குப் பகுதி மற்றும் ஒடிசா கரையின் தெற்குப் பகுதி ஊடாக இந்தச் சூறாவளி நகரக்கூடும்.

இதனால் இலங்கைக்கு நேரடியான தாக்கம் ஏற்படாது என்றாலும், நாட்டை ஊடறுத்து காற்று வீசுவதுடன், தென்மேற்குப் பிராந்தியத்தில் மழைவீழ்ச்சியும் அதிகரித்துக் காணப்படும்.

சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். இந்தப் பிராந்தியங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்கள்

வங்காள விரிகுடாவில் தாழ் அமுக்கம் உருவாகி வருவதால், கடல்சார் ஊழியர்களும் மீனவ சமூகத்தினரும் வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பிராந்தியங்களுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைக் கவனத்திற்கொண்டு செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

காங்கேசன்துறை தொடக்கம் புத்தளம், கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஊடாகப் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இந்தக் கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றருக்கும் அதிகமான வேகத்தில் அடிக்கடி காற்று வீசக்கூடும். இதனால், இக்கடல் பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.