அபிவிருத்தி நிதியைச் செலவிட முடியாத அரசு

2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட 1,380 பில்லியன் ரூபாவில், செப்டெம்பர் 30ஆம் திகதி வரையில் 385 பில்லியன் ரூபா மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும், ஹட்டன் நகர அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாவும் முழுமையாகப் பயன்படுத்தப்படாமல் மீண்டும் அரச திறைசேரிக்குத் திரும்பியுள்ளதாகவும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நடப்பு 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மொத்த மூலதன அபிவிருத்தி நிதியில் 27.9 சதவீதம் மாத்திரமே செலவிடப்பட்டுள்ளதாகவும், எஞ்சிய 995 பில்லியன் ரூபா இன்னமும் செலவிடப்படாமல் முடங்கிக் கிடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதில் செலுத்தப்பட வேண்டிய கொடுப்பனவுகள் ஏதேனும் இருப்பின், அவற்றைக் கழித்த பின்னர் உண்மையில் எவ்வளவு நிதி பயன்படுத்தப்படாமல் எஞ்சியுள்ளது என்பதை அரசு உடனடியாக நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வரவு – செலவுத் திட்ட உரையின்போது பாரிய நிதி ஒதுக்கீடுகளை அறிவித்துப் பெருமைப்பட்டுக்கொள்ளும் அரசு, அந்த நிதியை உரிய முறையில் அபிவிருத்தித் திட்டங்களுக்குப் பயன்படுத்தத் தவறி வருவதாகவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, ஹட்டன் நகர மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபா பயன்படுத்தப்படாமல் மீண்டும் திறைசேரிக்குத் திரும்பியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், முன்னதாக ஹட்டன் நகரில் ஒருவர் நடுவீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் படத்தை வைத்து, ‘எங்கள் குல சாமி’ எனக் கூறி கைகூப்பி வணங்கிய சம்பவத்தையும் நினைவுபடுத்தினார்.
தற்போது ஹட்டன் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் பயன்படுத்தப்படாமல் திரும்பியுள்ள நிலையில், ‘குல சாமி’ எனக் கொண்டாடிய அந்தக் ‘குலவிளக்கை’ தாம் தேடிக்கொண்டிருப்பதாக அவர் விமர்சித்தார்.
ஒதுக்கப்படும் நிதி உரிய திட்டமிடல் மற்றும் திறமையின்மை காரணமாகப் பயனின்றி மீண்டும் திரும்புகின்றது என்றால், தற்போதைய அரசின் ‘கையாலாகாத்தனத்துக்கு’ இதைவிட வேறு சான்று தேவையில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படைப் பொருளாதார மற்றும் உள்கட்டமைப்புப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாமல், ஒதுக்கப்பட்ட நிதியைக்கூடச் செலவிட முடியாத நிர்வாகச் சீர்கேட்டை இந்த நிலைமை வெளிப்படுத்துவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம் தொடர்பான அமைச்சு வாரியான முழுமையான விவரங்களைப் பெற்றுத்தருமாறு, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் ஊடாக பொது நிதிக் குழுவின் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் மனோ கணேசன் தெரிவித்தார்.
2027ஆம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீடுகளுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிப்பதற்கு முன்னர், இந்த ஆண்டில் ஒதுக்கப்பட்ட நிதியின் பயன்பாடு தொடர்பில் அரசு வெளிப்படையான அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

Comments 0
Be the first to comment.