மீண்டும் ஆட்சியை ஒப்படைக்க வேண்டாம்

நீண்டகாலமாக நாட்டைச் சூறையாடிய ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் இலங்கைக்குச் செய்த பேரழிவுகளை மக்கள் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது என்றும், தற்போதைய அரசில் சிறிய குறைபாடுகள் காணப்பட்டாலும் மீண்டும் பழைய அரசியல்வாதிகளிடம் அதிகாரத்தை ஒப்படைக்க நினைப்பது பாரிய தவறு என்றும் முன்னாள் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எச்சரித்துள்ளார்.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நீண்டகாலமாக நிலவிய ஊழல்மிக்க அரசியல் கலாசாரமே பொருளாதாரச் சீரழிவுக்கும் மக்களின் வறுமைக்கும் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், வறிய மக்களுக்குத் தகரத் தகடுகள் மற்றும் தலையணைகள் போன்ற தற்காலிகப் பொருட்களை வழங்கி வாக்குகளைப் பெற்றுக்கொள்வதே பழைய ஆட்சியாளர்களின் தந்திரமாக இருந்ததாகத் தெரிவித்தார்.
கடந்த காலத்தில் தாமும் அந்த அரசியல் கட்டமைப்புக்குள் இருந்தபோதிலும், அங்கு நிலவிய ஊழலைச் சகித்துக்கொள்ள முடியாமல் விலகியதாகக் குறிப்பிட்ட சரத் பொன்சேகா, தற்போது இத்தகைய ஊழல் கலாசாரத்தை நிராகரிக்கும் சக்தி ஆட்சியில் இருப்பது சாதகமான மாற்றம் என்றும் கூறினார்.
எரிபொருள் மற்றும் எரிவாயுவுக்காக மக்கள் நீண்ட வரிசைகளில் காத்திருந்தமை, தொடர் மின்வெட்டு, தாங்க முடியாத வரிச்சுமை, மருந்துத் தட்டுப்பாடு மற்றும் விவசாயச் சீரழிவு ஆகியவற்றுக்கு அப்போதைய ஆட்சியாளர்களே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்பு, வாகனம் மற்றும் வீடமைத்தல் போன்ற அடிப்படைக் கனவுகளைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனமைக்கு இத்தகைய ஊழல் அரசியல்வாதிகளே காரணம் என்பதை மக்கள் மறந்துவிடக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற சுவாரஸ்யமான சம்பவமொன்றையும் சரத் பொன்சேகா நினைவுகூர்ந்தார். விளக்கமறியலில் இருந்து வந்த எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுடன் அப்போதைய ஆளும் கட்சி அமைச்சர்கள் நடத்திய வாக்குவாதத்தை அவர் குறிப்பிட்டார்.
சிறையில் இருந்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்குத் தாம் பிரியாணி மற்றும் பிரைட் ரைஸ் அனுப்பி வைத்ததாக ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் நாடாளுமன்றத்திலேயே கூறியதாகத் தெரிவித்த சரத் பொன்சேகா, வெளியில் எதிரிகளாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள் தங்களுக்குள் எத்தகைய இரகசிய உறவுகளையும் சலுகைகளையும் பேணி வந்தனர் என்பதை இந்தச் சம்பவம் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
கடந்தகால ஊழல் அரசியலின் கொடூர விளைவுகளைச் சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய அரசின் சிறிய குறைபாடுகளைச் சாட்டாகக் கொண்டு நாட்டை அழித்த பழைய அரசியல்வாதிகளிடம் மீண்டும் ஆட்சியை ஒப்படைப்பது குறித்து மக்கள் சிந்திக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.
ஜனநாயகத்தைப் பேணிப் பாதுகாப்பதுடன், ஊழலுக்கு எதிராகச் சட்டத்தைத் தவறுகளுக்கு இடமின்றிக் கடுமையாக நடைமுறைப்படுத்தி, அரச வளங்களைப் பாதுகாப்பதன் மூலமே நாட்டை உண்மையான முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியும் என்றும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.