அரசின் புதிய சட்டங்கள் குறித்து சர்ச்சை

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம், சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக, அரசியல் எதிரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முடக்குவதற்கான நடவடிக்கைகளையே முன்னெடுத்து வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எடிரிமன்ன குற்றஞ்சாட்டியுள்ளார்.
பத்தரமுல்ல, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சில சட்டமூலங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கங்கள் தொடர்பாக தற்போது சிக்கலான சமூக விவாதம் இடம்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு முன்னரும், தேர்தல் காலத்திலும் மக்கள் விடுதலை முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன பல ஆண்டுகளாக முன்வைத்த அரசியல் கலாசாரத்துக்கும், தற்போது சட்டங்களை உருவாக்குவதிலும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதிலும் அரசாங்கம் பின்பற்றும் அணுகுமுறைக்கும் இடையில் பெரும் முரண்பாடு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தனிநபர் சுதந்திரத்துடன் தொடர்புடைய, மிகவும் உணர்வுபூர்வமான நீதித்துறை அதிகாரங்கள் நீதிமன்றங்களிடமே இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், அந்த அதிகாரங்களை விசாரணை அமைப்புகளுக்கு மாற்றுவதற்கான அரசியல் உத்தியையே அரசாங்கம் பின்பற்றுவதாகக் குற்றஞ்சாட்டினார்.
நீதித்துறை அதிகாரங்களைத் தமது அரசியல் நோக்கங்களுக்காகச் செயற்படும் விசாரணையாளர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், இதன் நோக்கம் சமூகச் சீர்திருத்தம் அல்ல என்றும் அவர் தெரிவித்தார். மாறாக, அரசியல் எதிரிகளை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு சிறையில் அடைத்து, வலுவான எதிர்த்தரப்பு இல்லாத அரசியல் களத்தை உருவாக்குவதே இதன் நோக்கம் எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
“நீதிமன்றத்தில் மட்டுமே தீர்க்கப்படக்கூடிய பிரச்சினையை பொலிஸ் கூண்டுக்குள் தீர்க்க முடியாது என்பதை ஜனாதிபதி இப்போது புரிந்துகொள்கிறாரா? ஹோமாகம பொலிஸ் கூண்டிலிருந்து எழுந்த அலறல்களை அரசாங்கம் கேட்டதா?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
உயிரிழந்த நபர் நல்லவரா, கெட்டவரா என்பது இங்கு முக்கியமான கேள்வியல்ல எனக் குறிப்பிட்ட அவர், தவறு செய்த ஒருவரைத் தண்டிப்பதற்கான வழிமுறை இதுவல்ல என்றும் தெரிவித்தார். நீதிமன்றத்தால் வழங்கப்பட வேண்டிய தண்டனை, பொலிஸ் கூண்டுக்குள் மரண தண்டனையாக மாறக்கூடிய சூழலுக்கு சட்டரீதியான பாதுகாப்பை ஏற்படுத்தவே அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை மாற்றும் வகையில் சட்டங்களை இயற்ற முடியாது என அரசியலமைப்புச் சட்டமும் அரசியல் விஞ்ஞானமும் குறிப்பிடுவதாகச் சுட்டிக்காட்டிய அவர், தனிநபர் சுதந்திரம் அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்ட அடிப்படை உரிமை என்றும் தெரிவித்தார்.
இதேவேளை, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட “வளமான நாடு – அழகான வாழ்க்கை” என்ற தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளுக்கு அமைவாக, இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை ஜனாதிபதியால் முன்வைக்க முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
அரசாங்கம் தனது சொந்த தேர்தல் விஞ்ஞாபனத்தையே மறந்துவிட்டு, வேறொரு உலகத்தில் இருப்பதைப் போல ஆட்சி நடத்துவதாகவும் சஞ்சீவ எடிரிமன்ன விமர்சித்தார்.

Comments 0
Be the first to comment.