சபாநாயகர் மீதான பிரேரணையில் சர்ச்சை!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் சபாநாயகருக்கு எதிராக, அரச சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துதல் மற்றும் குற்றவியல் ரீதியிலான செயற்பாடுகள் உள்ளிட்ட 50 அம்சங்களைக் கொண்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, 44 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் எதிர்க்கட்சியால் கையளிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.
எதுல்கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் எஸ்.எம். மரிக்கார் எம்.பி. மேலும் தெரிவித்ததாவது:
“சபாநாயகருக்கு உத்தியோகபூர்வ வாசஸ்தலம் உள்ள நிலையில், அரச நிர்வாக அமைச்சுக்குச் சொந்தமான மற்றொரு பல மாடிக் குடியிருப்பைப் பயன்படுத்துதல், அங்கு தளபாடங்களை எடுத்துச் செல்லுதல், நாடாளுமன்ற உணவகத்தில் எவ்வித கட்டணமும் இன்றி உணவுகளைப் பெற்று நிதி இழப்பை ஏற்படுத்தியமை, ஊடகப் பிரிவைத் தனியார் நேர்காணல்களுக்காகச் சட்டவிரோதமாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட 50 பலத்த குற்றச்சாட்டுகள் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
“இந்தப் பிரேரணை கையளிக்கப்பட்டவுடன் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. எனினும், தற்போது நீதிமன்ற வழக்கொன்றைக் காரணம் காட்டி, இதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதை அரசாங்கம் தவிர்க்க முயற்சிக்கின்றது.
“நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட மாத்திரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகக் கூறுவது அடிப்படையற்றது. அத்துடன், நாடாளுமன்றத்தின் இறைமையை எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையாலும் மாற்ற முடியாது. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்குள் இந்தப் பிரேரணை விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படாவிட்டால், குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றையும் மக்கள் மத்தியில் பகிரங்கப்படுத்துவோம்.
“பயங்கரவாதத் தடைச் சட்டம் முழுமையாக நீக்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தேசிய மக்கள் சக்தி, இன்று அதைவிடவும் கடுமையான அடக்குமுறைச் சட்டத்தைக் கொண்டுவந்துள்ளது.
“நீதிவான் ஒருவரால்கூடப் பிணை வழங்க முடியாத வகையில், பாதுகாப்பு அமைச்சரின் உத்தரவின் பேரில் நபர்களை இரண்டு மாதங்கள் தடுத்து வைக்கவும், பொலிஸ் அதிகாரங்களை முப்படையினருக்கும் கடலோரப் பாதுகாப்புப் படைக்கும் வழங்கவும் இந்தச் சட்டத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
“இந்த அடக்குமுறைச் சட்டங்கள் காரணமாக, 2027 ஜனவரிக்குள் ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து இலங்கைக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையை இழக்கும் பாரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. நாட்டில் ஜனநாயகமும் சட்டத்தின் ஆட்சியும் சீர்குலைந்துள்ளதால், வெளிநாட்டு முதலீடுகளோ டொலர்களோ நாட்டுக்குள் வருவதில்லை.
“போர்ட் சிட்டி திட்டத்தின் 500 மில்லியன் டொலர் பெறுமதியான செயற்றிட்டங்களும் வெளிநாட்டு முதலீடுகளும் நாட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருக்கின்றன. டொலர் வருமானம் இழக்கப்பட்டதால் எரிவாயு வரிசைகள் உருவாகி, மின்கட்டணம் 50 சதவீதத்தால் உயர்த்தப்பட்டு, மக்கள் தங்க நகைகளை அடகு வைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
ஐந்து ஆண்டுகள் அவகாசம் கேட்ட தலைவர்கள், நாட்டை 50 ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் சென்றுள்ளனர்.
“அதுமட்டுமன்றி, கடந்த காலத்தில் தடுப்புக் காவலில் இருப்பவர்கள் உயிரிழப்பது தொடர்பாக ஜனநாயகம் பேசிய தரப்பினர், இன்று ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் மௌனமாகத் தப்பியோடி வருகின்றனர்” என்றார்.

Comments 0
Be the first to comment.