கோட்டாவின் பயணத்தடை நீக்கப்படுமா?

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் இணைந்த வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கை குறித்து எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி கருத்துகளை முன்வைக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு (சி.ஐ.டி.) கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது.
மேலதிக சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் செல்வதற்கு அனுமதி கோரி முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் குழு தாக்கல் செய்த மனுவைப் பரிசீலித்த கொழும்பு கோட்டை நீதிவான் வசந்த அமரசேன இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்கெனவே சிங்கப்பூரிலுள்ள வைத்தியசாலையொன்றில் இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டிருந்த நிலையில், அதன் தொடர்ச்சியான மேலதிக மருத்துவ சிகிச்சைகளுக்காக மீண்டும் சிங்கப்பூர் செல்ல வேண்டியுள்ளதால், அவரது பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தனர்.
வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் திறந்த நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகியிருந்தார்.
எனினும், இந்த வழக்கின் முறைப்பாட்டாளரான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அப்போது நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை.
இதனையடுத்து, பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குவது தொடர்பான கோரிக்கைக்குத் தமது தரப்பு பதிலையும் நிலைப்பாட்டையும் முன்வைப்பதற்காக எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிவான் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் புலனாய்வுத்துறை அதிகாரிகள் சிலருக்கு வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments 0
Be the first to comment.