அரசின் புதிய சட்டமூலங்களுக்கு சஜித் கடும் எதிர்ப்பு
நாட்டில் இரு புதிய சட்டமூலங்களைக் கொண்டுவந்து, சட்டபூர்வமான முறையில் மக்கள் மீது அரச பயங்கரவாதத்தைத் திணிக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டியுள்ளார்.
பொலன்னறுவை மாவட்டம், கல்லெல குசும்மகம ஸ்ரீ சுபோதிராஜாராம விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சீமெந்து மூட்டைகளை வழங்கும் புண்ணிய நிகழ்வில் நேற்று (1) ஞாயிற்றுக்கிழமை கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் அங்கத்தவர் விரிவாக்க வேலைத்திட்டத்தில் பங்கேற்பதற்காகப் பொலன்னறுவை மாவட்டத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.
அரசாங்கத்தின் புதிய சட்டமூலங்கள் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ,
ஒவ்வொரு குடிமகனுக்கும் மதச் சுதந்திரம், சித்தாந்த சுதந்திரம், அரசியல் உரிமை, கருத்துச் சுதந்திரம் மற்றும் அமைதியான முறையில் போராட்டங்களை நடத்துவதற்கான அடிப்படை உரிமைகள் காணப்படுகின்றன. எனினும், அரசாங்கம் கொண்டுவந்துள்ள புதிய சட்டமூலங்கள் மக்களின் இந்தச் சுதந்திரங்களைப் பறிப்பதாகக் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களைத் தடுத்தல் என்ற பெயரில் கொண்டுவரப்பட்டுள்ள இரு சட்டங்களின் மூலம் நீதிமன்ற அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பயங்கரவாதி யார் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மக்கள் அணியும் ஆடை, சிகை அலங்காரம் மற்றும் பச்சைக்குத்துதல் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எவரையும் பயங்கரவாதியாகவோ குற்றவாளியாகவோ முத்திரை குத்தும் அதிகாரத்தை அரசாங்கம் கையில் எடுத்துள்ளதாகவும், இது 220 இலட்சம் மக்கள் மீது சட்டபூர்வமாக அரச பயங்கரவாதத்தைத் திணிக்கும் முயற்சி என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
அரசாங்கத்தின் அரசியல் நோக்கம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு சர்வதேச உடன்படிக்கைகளுக்கு அமைவாகத் தயாரிக்கப்பட்ட சட்டங்களே அவசியம் எனக் குறிப்பிட்டார்.
எனினும், தற்போதைய அரசாங்கம் மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவற்றை மீறி தனிக்கட்சி ஆட்சியை நிறுவி ஜனநாயகத்தை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
புத்த சாசனத்துக்கு அரசமைப்பில் வழங்கப்பட்டுள்ள விசேட அந்தஸ்தைப் போன்று ஏனைய மதங்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ புத்த சாசன அமைச்சை உருவாக்கியதுடன், ஏனைய மதங்களுக்கும் இராஜாங்க அமைச்சுகளை அமைத்ததாகவும், ஆனால் தற்போதைய ஆட்சியாளர்கள் அவற்றைத் திணைக்களங்களாகச் சுருக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பிக்குகளின் காவி உடையிலும் கை வைக்கும் அளவுக்கு ஆட்சியாளர்கள் சென்றுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தாம் மதத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்யவில்லை என்றும், இனவாதம் மற்றும் மதவாதத்தை நிராகரித்து முற்போக்குத் தேசியவாதத்தையே முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.