—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

36 ஆண்டுகளாகத் தொடரும் காணிப் பிரச்சினை; மக்கள் போராட்டம்

முப்படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள தமது சொந்தக் காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி, வலிகாமம் வடக்கு மக்கள் நேற்று (1) ஞாயிற்றுக்கிழமை பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இடங்களில் கவனயீர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

கடந்த 36 ஆண்டுகளாகத் தமது சொந்த நிலங்களை இழந்துள்ள மக்கள், இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை மீளக் கையளிக்குமாறு வலியுறுத்தியே இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 36 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமது சொந்த நிலங்களும் வீடுகளும் இராணுவத்தினரின் வசம் காணப்படுவதாகத் தெரிவித்தனர்.

பொதுமக்கள் குடியிருக்க வேண்டிய நிலங்களில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளையும் வர்த்தக நிலையங்களையும் அமைத்து, தமது சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால், சொந்த நாட்டிலேயே நிலமற்றவர்களாகத் தமது மக்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்காலிக முகாம்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் அகதிகளைப் போன்று வாழும் அவலநிலை தொடர்வதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, தமது வீடுகளையும் காணிகளையும் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நேற்று காலை பலாலி சந்தி மற்றும் வசாவிளான் சந்தி ஆகிய இரு இடங்களிலும் ஒரே நேரத்தில் மக்கள் ஒன்றுகூடி இந்தப் போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதன்போது, தமது கோரிக்கைகள் அடங்கிய வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.