—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அரசைச் சாடிய சஜித்

அரசைச் சாடிய சஜித்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோவால் பதிலளிக்க முடியாமல் போனது வருத்தமளிப்பதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வரவு செலவுத் திட்டத்தின் முன்னேற்றம் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாலேயே அதன் முன்னேற்றம் குறித்து அரசு மறைத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “இன்னும் மூன்று வாரங்களில் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்படவுள்ள நிலையில், கடந்த ஆறு மாதங்களாகக் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத நிலை காணப்படுகின்றது. இந்த ஆட்சியின் காரணமாக நாடு ஆபத்தான நிலையில் உள்ளது” என்றார்.

நாட்டில் வேகமாகப் பரவி வரும் போதைப்பொருள் விவகாரம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், "பாடசாலை அமைப்புக்குள்ளும் போதைப்பொருள் வர்த்தகம் நுழைந்துள்ளதால், இளம் சந்ததியினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிங்கப்பூரில் கடுமையான தண்டனைகள் வழங்கப்படுவதைப் போன்று, எமது நாட்டிலும் நீதித்துறை சுயாதீனமாகச் செயற்பட வேண்டும்.

சிறைச்சாலைக்குள் இருந்துகொண்டு போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் நபர்களைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்துத் துறைகளின் ஆதரவையும் ஐக்கிய மக்கள் சக்தி வழங்கும்” என்றார்.

வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்துக் குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், கல்கமுவ பிரதேசத்தில் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த ‘காவந்திஸ்ஸ’ யானை தொடர்பான விவகாரம் குறித்தும் விளக்கமளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கையில் உள்ள அடுத்த மிகப்பெரிய யானையான ‘மஹாசேன்’ யானை, மரதன்கடவல பிரதேசத்தில் சுற்றித்திரிந்த நிலையில் தற்போது காணாமல் போயுள்ளது. அக்போ யானையைத் தேடுவதற்கு நடவடிக்கை எடுத்ததைப் போன்று, மஹாசேன் யானையையும் விரைவாகக் கண்டுபிடிக்க வேண்டும்.

எஞ்சியுள்ள யானை வளத்தைப் பாதுகாப்பதற்காக முப்படையினர், சிவில் பாதுகாப்புப் படை, வனவிலங்குகள் திணைக்களம் மற்றும் சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றை ஒன்றிணைத்துப் பிரத்தியேகப் படையணி ஒன்றை நிறுவ வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.