—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

அர்னாப் புயல் குறித்து அறிவிப்பு

அர்னாப் புயல் குறித்து அறிவிப்பு

வங்காள விரிகுடா கடற்பரப்பில் உருவாகியுள்ள ‘அர்னாப்’ புயல் காரணமாக இலங்கைக்கு நேரடிப் பாதிப்புகள் எதுவும் இல்லை என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வங்காள விரிகுடாவின் நடுக்கடற்பரப்பில் நிலவிய ஆழமான காற்றழுத்தத் தாழ்வு நிலை தற்போது ‘அர்னாப்’ புயலாக வலுப்பெற்றுள்ளதாகத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க இன்று ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இன்று திங்கட்கிழமை அதிகாலை நிலவரப்படி, இந்தப் புயல் வங்காள விரிகுடாவின் நடுக்கடற்பரப்பில், குறிப்பாக இந்தியாவின் அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள ஸ்ரீ விஜயபுரத்துக்கு (போர்ட் பிளேர்) கிழக்கே சுமார் 590 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்தப் புயல் மேலும் தீவிரமடைந்து அதிதீவிரப் புயலாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ள போதிலும், இதனால் இலங்கைக்கு நேரடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

புயலின் மறைமுகச் சுழற்சி காரணமாக நாட்டில் மழை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்ந்து நிலவும். வடமத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மாவட்டத்திலும் இடைக்கிடையே பலத்த மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான கனமழை எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று, புத்தளம், மன்னார் மற்றும் காங்கேசன்துறை தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும்.

வங்காள விரிகுடாவின் ஆழமான நடுக்கடற்பரப்புகளில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் அலைகள் சீற்றத்துடனும் காணப்படும் என்பதால், ஒக்டோபர் 26, 27 மற்றும் 28ஆம் திகதிகளில் ஆழ்கடலுக்குச் செல்வதை முற்றிலுமாகத் தவிர்க்குமாறு மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்தப் புயல் எதிர்வரும் 28ஆம் திகதியளவில் இந்தியாவின் ஒடிசா மாநிலக் கரையைக் கடந்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னரே இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.