அல்லைப்பிட்டி விபத்தில் பெண் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் 66 வயதுடைய குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
நீர்வேலி தெற்கு, நீர்வேலி பகுதியைச் சேர்ந்த ஞானேந்திரன் விமலா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் நேற்று ஊர்காவற்துறை பகுதியில் இடம்பெற்ற மரணச் சடங்கொன்றில் கலந்துகொண்ட பின்னர், முச்சக்கர வண்டியில் யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்துள்ளார்.
அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டிக்கு முன்னால் சென்ற அரச பேருந்து அல்லைப்பிட்டி பகுதியில் நிறுத்தப்பட்டபோது, முச்சக்கர வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து பேருந்துடன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி, குறித்த பெண் மற்றும் அவருடன் பயணித்த மற்றொரு பெண் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி ஞானேந்திரன் விமலா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி ஆறுமுகம் ஜெயபாலசிங்கம் மேற்கொண்டு வருகின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Comments 0
Be the first to comment.