இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தக் கோரிக்கை

வடபகுதியில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபடுவோர் பெரும் செல்வந்தர்களாக மாறிவரும் நிலையில், பாரம்பரிய மீனவர்கள் வறுமையால் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடபகுதி கடற்பரப்பில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இறால் பிடிப்புக் காலத்தில் வடபகுதி மீனவர்களுக்குச் சிறிதளவாவது வருமானம் கிடைக்க வேண்டுமெனில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைவரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாடு முழுவதும் நிலவும் பிரச்சினைகளுக்கு மேலதிகமாக, வன்னி மக்கள் எதிர்கொள்ளும் சமத்துவத்திற்குச் சவாலான காரணிகள் குறித்தும் இப்பேரவையில் எடுத்துரைத்து, அவற்றுக்கான தீர்வுகளைக் கோருவதற்காகத் தமது நேரத்தைப் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டில் முல்லைத்தீவு மாவட்டத்தின் மீன் உற்பத்தி 8,220.49 மெற்றிக் தொன் என அரச தரப்புப் புள்ளிவிபரங்கள் குறிப்பிடுகின்றன. இத்தகைய புள்ளிவிபரங்கள், முல்லைத்தீவு மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் வலுவாக இருப்பதாக வெளி உலகிற்குத் தவறான செய்தியை எடுத்துச் செல்லும் நிலையை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் வெறிச்சோடிக் காணப்படும் நிலையில், பாரம்பரிய மீனவர்களின் வாழ்வாதாரம் நலிவடைந்து அவர்கள் வறுமையில் வாடுகின்றனர். எனவே, அரச தரப்பில் வெளியிடப்படும் மீன் உற்பத்திப் புள்ளிவிபரங்கள் மாவட்டத்தின் உண்மையான நிலைமையைப் பிரதிபலிக்கின்றனவா என்ற கேள்வி எழுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இவ்வாறான மீன் உற்பத்திப் புள்ளிவிபரங்களால் அதிக செல்வச் செழிப்புடன் வாழ்பவர்கள் முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களே என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
மீன்பிடித் துறையில் டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்தி, பதிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மீனவரிடமிருந்தும், மீன்பிடித் துறைகளிலிருந்தும் பிடிக்கப்படும் மீன்களின் அளவைக் கணக்கிட வேண்டும். இதன் மூலமே இத்தகைய மீன் உற்பத்தி முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிலைமையையும் பிரதிபலிக்கின்றதா என்பதை கடற்றொழில் அமைச்சு உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.
கடந்த வாரம் வெறிச்சோடிக் காணப்பட்ட முல்லைத்தீவு மாவட்டக் கடற்கரையை நேரில் சென்று பார்வையிட்டதாகக் குறிப்பிட்ட அவர், முல்லைத்தீவு கடற்பரப்பில் மட்டுமன்றி வடமாகாணக் கடற்பரப்பு முழுவதிலும் இத்தகைய சட்டவிரோத மீன்பிடி முறைகள் ஊடாகவே அதிகளவான மீன்கள் பிடிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோர் பெரும் செல்வந்தர்களாக மாறுவதும், பாரம்பரிய மீனவர்கள் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் அளவுக்கு வறுமையில் தள்ளப்படுவதுமே கடந்த இரண்டு ஆண்டுகளில் வடகடலில் கடற்றொழில் அமைச்சும் கடற்படையும் சாதித்துள்ளதாக அவர் விமர்சித்தார்.
முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்கள அலுவலகப் புள்ளிவிபரங்களின்படி, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் தொடர்பாக 2025ஆம் ஆண்டில் முல்லைத்தீவில் 136 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து தண்டப்பணமாக 7.1 மில்லியன் ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு மே மாதம் வரையான காலப்பகுதியில் 53 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 1.28 மில்லியன் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளது.'
2025ஆம் ஆண்டில் சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு கைது என்ற அடிப்படையிலும், 2026ஆம் ஆண்டில் ஐந்து நாட்களுக்கு ஒரு கைது என்ற அடிப்படையிலும் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோரை கடற்றொழில் அமைச்சு மெத்தனப்போக்கில் கையாள்வதாக அவர் குற்றஞ்சாட்டினார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் ஒருநாள் மீன்பிடியின் மூலம் ஈட்டும் வருமானத்துடன் ஒப்பிடுகையில், ஒரு வழக்கிற்காக விதிக்கப்படும் தண்டப்பணம் மிகக் குறைவானதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஒவ்வொரு முறையும் நூற்றுக்கணக்கான கிலோகிராம் மீன்களைப் பிடிக்கும் சட்டவிரோத மீன்பிடியாளர்களுக்கு இத்தகைய தண்டப்பணங்களும் தண்டனைகளும் போதுமானவையா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காகக் கடுமையான தண்டனைகளை வழங்கும் வகையில் அரசாங்கம் சட்டத்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
வான்பரப்பு, கடல் மற்றும் நிலப்பரப்பில் போதைப்பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் காட்டும் அதே அக்கறையை, கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக ஒழிப்பதிலும் செலுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
கடந்த வாரமும் தமது மாவட்ட மீனவர்கள், தமது கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகள் மீன்பிடியில் ஈடுபடுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள இறால் பிடிப்புக் காலத்தில் வடபகுதி மீனவர்களுக்குச் சிறிதளவாவது வருமானம் கிடைக்க வேண்டுமெனில், எல்லைதாண்டி வரும் இந்திய இழுவைப் படகுகளையும் கட்டுப்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வடகடல் பரப்பை முழுமையாகக் கட்டுப்படுத்த கடற்படையால் முடியாவிட்டாலும், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளையும் இந்திய இழுவைப் படகுகளையும் கட்டுப்படுத்த கடற்றொழில் அமைச்சால் முடியாவிட்டாலும், அதற்கான அதிகாரங்களையும் கருவிகளையும் தமது மீனவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அவ்வாறு அதிகாரங்களும் கருவிகளும் வழங்கப்பட்டால், ஒரு மாதத்திற்குள் இப்பிரச்சினைகளைக் கட்டுப்படுத்திக் காட்டுவதாகவும் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.