இந்திய பௌத்த அறிஞர்கள் இலங்கையில் சந்திப்பு
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள ‘புத்தவனம்’ திட்டத்தின் விசேட அதிகாரி பேராசிரியர் மாலப்பள்ளி லக்ஷ்மையா தலைமையிலான உலக பௌத்த அறிஞர்கள் கூட்டமைப்பின் முக்கிய பிரதிநிதிகளும், பிரபல இந்திய நடிகரும் பௌத்த செயற்பாட்டாளருமான கலாநிதி ககன் மாலிக் உள்ளிட்டோரும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வாவை நேரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது, பௌத்த சமய நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்தல், இரு நாடுகளினதும் பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் இந்தியா – இலங்கை இடையிலான கலாசார, ஆன்மீக உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய நோக்கங்களைக் கொண்ட கூட்டமைப்பின் கூட்டு ஒத்துழைப்புத் திட்டங்கள் தொடர்பாக விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளிலும் காணப்படும் வரலாற்றுச் சிறப்புமிக்க பௌத்த மரபுரிமைகளைப் பாதுகாத்தல், பௌத்த கலாசாரத்தைப் பரப்புதல், பிராந்திய அமைதி, நல்லிணக்கம் மற்றும் நட்புறவை வலுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு இத்தகைய ஆன்மீகச் செயற்பாடுகள் பெரும் பங்களிப்புச் செய்யும் என இதன்போது இரு தரப்பினரும் சுட்டிக்காட்டினர்.
மேலும், பரஸ்பர புரிந்துணர்வுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இந்தியா மற்றும் இலங்கை இடையிலான வரலாற்று, கலாசார, சுற்றுலா மற்றும் ஆன்மீக ரீதியிலான தொன்மையான தொடர்புகளைப் புதிய பரிமாணத்தில் வலுப்படுத்துவது குறித்தும் இந்தச் சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டது.

Comments 0
Be the first to comment.