—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

இலக்கியப் படைப்பாளிகளுக்கு விருதுகள்

எத்தனை சவால்களும் பொருளாதாரக் கஷ்டங்களும் நிலவினாலும், நமது கலாசாரத்தையும் கலைகளையும் பேணிப் பாதுகாத்து வரும் கலைஞர்களும் பண்பாட்டுச் செயற்பாட்டாளர்களும் கௌரவிக்கப்பட வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில், கிழக்கு மாகாண இலக்கிய விருது வழங்கும் விழா இன்று மட்டக்களப்பு “கோல்டன் ரிவர்” விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுநர் கலாநிதி ஜெயந்த லால் ரத்னசேகர பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் மற்றும் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிறந்த படைப்பாளிகளையும் எழுத்தாளர்களையும் கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இளங்கலைஞர் விருதுகளும் வழங்கப்பட்டதுடன், 11 பேர் நூல்களுக்கான சிறந்த எழுத்தாளர் விருதுகளையும், 17 கலைஞர்கள் இவ்வாண்டுக்கான வித்தகர் விருதுகளையும் பெற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மூன்று இனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய ஆளுநர், கடந்த காலத்தில் இருந்த தொழில்நுட்ப வசதிகளையும் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஒப்பிட்டு உரையாற்றினார்.

“முன்னைய காலத்தில் தொலைபேசிகள் வீடுகளில் மட்டுமே நிலையாக இருந்தன. ஆனால் இன்று கையடக்கத் தொலைபேசிகள் மூலம் எந்த நேரத்திலும் தொடர்புகொள்ள முடிகிறது. இவ்வாறான நவீன காலத்தில், நமது கலாசாரத்தையும் சிந்தனைகளையும் எழுத்து வடிவில் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்க வேண்டும். எழுதும் திறமை உள்ளவர்கள் தங்கள் எண்ணங்களைத் தைரியமாக எழுதி வைக்க வேண்டும்” என அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், “கடந்த 30 ஆண்டுகால யுத்தக் காலத்திலும் கிழக்கு மாகாணத்தின் கலாசாரம் அழியாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், பர்கர்கள் என அனைத்து சமூகத்தினரும் இணைந்து வாழும் இந்தப் பன்முகத்தன்மை கிழக்கு மாகாணத்தின் தனிச்சிறப்பாகும். இது மற்ற மாகாணங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கிறது.

அரசியல்வாதிகள் அரசியலைச் செய்யலாமே தவிர, மக்களின் ஒற்றுமையையோ கலாசாரத்தையோ யாராலும் அழிக்க முடியாது. நாம் அனைவரும் இலங்கையர்கள் என்ற உணர்வோடு வாழ வேண்டும்.

ஒவ்வொரு தலைமுறையிலும் மூத்தவர்கள், ‘இன்றைய இளைஞர்கள் சரியாக இல்லை’ என்று சொல்வது இயல்பான மனிதப் பரிணாம வளர்ச்சியாகும். எனவே, புதிய தலைமுறையினரைக் குறைகூறாமல், அவர்களின் வேகத்தையும் தொழில்நுட்ப அறிவையும் புரிந்துகொண்டு அவர்களை நாம் வழிநடத்த வேண்டும்.

இத்தனை சவால்களுக்கு மத்தியிலும் நமது கலாசாரத்தைப் பாதுகாத்து நாட்டிற்குப் பெருமை சேர்க்கும் கலைஞர்களைக் கௌரவிப்பது மாகாணத்திற்கும் நாட்டிற்கும் பெருமையளிக்கிறது” என்றார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.