நிரந்தரக் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே சிலிண்டர் விநியோகம்
கொட்டகலைப் பகுதியை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களுக்கு மாதந்தோறும் எவ்விதத் தட்டுப்பாடுமின்றி சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கும் நோக்கில், கூப்பன் அடிப்படையிலான விநியோக முறையை நடைமுறைப்படுத்துவதற்குக் கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதன்படி, கொட்டகலைப் பகுதியில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களுக்கு மாதம் ஒன்றுக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் கூப்பன்கள் வழங்கப்படவுள்ளன.
குறித்த கூப்பனை கிராம சேவை உத்தியோகத்தரிடம் உறுதிப்படுத்திய பின்னரே எரிவாயு சிலிண்டர்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்பட்டபோது நடைமுறைப்படுத்தப்பட்ட கூப்பன் விநியோக முறையை மீண்டும் அறிமுகப்படுத்தி, அதன் அடிப்படையில் எரிவாயு விநியோகத்தை முன்னெடுப்பதற்கும் கூட்டத்தில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் கொட்டகலையை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதுடன், ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒரு சிலிண்டர் என்ற அடிப்படையில் அனைவருக்கும் சீரான முறையில் எரிவாயு கிடைப்பதை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பத்தன பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, கொட்டகலை கிராம சேவை உத்தியோகத்தர், கொட்டகலை ஐக்கிய வர்த்தகர் சங்கத்தின் தலைவர் உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் மற்றும் கொட்டகலைப் பகுதியிலுள்ள அனைத்து எரிவாயு விற்பனையாளர்களும் கலந்துகொண்டனர்.
பொதுமக்களின் நலனைக் கருத்திற்கொண்டு, எரிவாயு விநியோகத்தில் சமத்துவத்தையும் ஒழுங்குமுறையையும் உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Comments 0
Be the first to comment.