இளைஞர் குரல்களுக்கு நாடாளுமன்றத்தில் வாய்ப்பு
‘Voice to Policy’ செயலமர்வுகள் மூலம் இளைஞர்கள் முன்வைத்த கருத்துகள், பிரச்சினைகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை நாடாளுமன்றக் குழுக்களில் முன்வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அத்துடன், நாடாளுமன்றக் குழுக்களின் செயற்பாடுகளில் இளைஞர் பிரதிநிதிகள் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
திறந்த நாடாளுமன்ற முன்னெடுப்புக்கான நாடாளுமன்றக் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கலந்துரையாடல், அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அமைச்சர் பேராசிரியர் கிருஷாந்த அபேசேன மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோர் இணைந்து இதற்குத் தலைமை தாங்கினர்.
திறந்த நாடாளுமன்றக் கொள்கையை ஊக்குவிப்பதற்கும், நாடாளுமன்றச் செயற்பாடுகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் கம்பஹா, மட்டக்களப்பு மற்றும் கண்டி மாவட்டங்களில் செயலமர்வுகள் நடத்தப்பட்டன.
இந்தச் செயலமர்வுகளில் பங்கேற்ற இளைஞர் பிரதிநிதிகள், தங்கள் மாவட்டங்களில் காணப்படும் பொதுவான பிரச்சினைகள், கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை முன்வைத்தனர்.
இளைஞர்கள் அடையாளம் கண்ட பிரச்சினைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை எதிர்கால நாடாளுமன்றச் செயற்பாடுகளில் கவனத்தில் கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
மேலும், இளைஞர் பிரதிநிதிகள் தங்களது ஆர்வத்துக்குரிய துறைகளுடன் தொடர்புடைய துறைசார் மேற்பார்வைக் குழுக்களுடன் நேரடியாகத் தொடர்புகொண்டு, தமது கருத்துகள் மற்றும் கொள்கை முன்மொழிவுகளை முன்வைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
இளைஞர்களின் கருத்துகளை நாடாளுமன்றச் செயற்பாடுகளுடன் இணைப்பதன் மூலம் ஜனநாயகத்தில் பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதே இந்த முன்னெடுப்பின் முக்கிய நோக்கமாகும்.
‘Voice to Policy’ செயலமர்வுத் தொடருக்கு ஆதரவளிக்கும் Coalition for Inclusive Impact (CII) மற்றும் National Democratic Institute (NDI) ஆகிய அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

Comments 0
Be the first to comment.