செம்மணி அறிக்கை குறித்து சுரேஷ் சீற்றம்

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரங்களைப் போன்று பூசி மெழுகப்பட்டு, கைவிடப்படும் ஒரு விவகாரமாக மாறிவிடுமோ என்ற ஆழமான அச்சம் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
எனவே, இந்த விவகாரம் சரியான திசையில் பயணிக்க வேண்டுமெனில் சர்வதேசக் கண்காணிப்பு கட்டாயம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஏற்கனவே, செம்மணி புதைகுழி விவகாரம் சரியான பாதையில் முன்னெடுக்கப்படுமா என்ற சந்தேகம் தமிழ் மக்கள் அனைவரிடமும் இருக்கின்றது.
ஏனெனில், மன்னார் புதைகுழி விவகாரமோ அல்லது முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் புதைகுழி விவகாரமோ, இவ்வாறான அனைத்துப் புதைகுழி விவகாரங்களுமே இறுதியில் கைவிடப்பட்ட விவகாரங்களாகவே மாறிவிட்டன.
தற்போது வெளியாகியுள்ள செம்மணிப் புதைகுழி அறிக்கையும் அதேபோன்று பூசி மெழுகப்படலாம் என்றே தோன்றுகின்றது. இந்த அரசும் முன்னர் இருந்த அரசுகள் கையாண்ட முறைகளையே பின்பற்றப் போகின்றது என்ற அச்சம் இந்த அறிக்கையின் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது” என்றார்.
உள்நாட்டிலும் புலம்பெயர் தேசங்களிலும் நிலவும் சந்தேகங்கள் குறித்துத் தெரிவித்த அவர்,
“உள்நாட்டிலும் சரி, புலம்பெயர்ந்த தேசங்களிலும் சரி, தற்போதைய அறிக்கை செம்மணி விவகாரம் சரியான திசையில் நகராது என்ற கடுமையான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆகவேதான், செம்மணிப் புதைகுழி விவகாரத்துக்குத் தெளிவான நீதி கிடைக்க வேண்டுமாயின், நிச்சயமாக சர்வதேசக் கண்காணிப்பு அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றோம்” என்றார்.

Comments 0
Be the first to comment.