—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

ஈஸ்டர் தாக்குதல்: சிஐடிக்கு அனுமதி

ஈஸ்டர் தாக்குதல்: சிஐடிக்கு அனுமதி

இருநூற்று அறுபதிற்கும் மேற்பட்ட பொதுமக்களின் உயிரைப் பறித்த, 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய, இதுவரை சட்டத்தின் பிடியில் சிக்காத நபர்களைச் சட்டத்தின் முன் நிறுத்தும் நோக்கில், தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட மூவரிடம் விசாரணை நடத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளது.

“நீதிபதி அவர்களே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரதான வழக்குதான் அண்மையில் மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நிறைவடைந்த வழக்காகும். அந்த வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், மூன்று குற்றவாளிகள் எவ்வித அச்சமுமின்றி நீதிபதிகள் குழாம் முன்னிலையில், ‘நாங்கள் சிறைக்குச் சென்றாலும், உண்மையில் இந்தத் தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் வெளியில் இருக்கிறார்கள்’ என்று கூறுகின்றனர். நீதிபதி அவர்களே, இது மிகவும் பயங்கரமான ஒரு கூற்றாகும். அதற்கமைய, மில்ஹான், ரிஸ்கான் மற்றும் செய்னூல் ஆப்தீன் ஆகியோரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கு அனுமதி வழங்குங்கள்” என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளைத் திசைதிருப்பியமை தொடர்பில், அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, ஒக்டோபர் 21ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போதே மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், கோட்டை நீதவான் பசன் அமரசேனவிடம் குறித்த அனுமதியைக் கோரியுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர்களிடம் வாக்குமூலங்களைப் பெறுவதற்காக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்ற அனுமதியைக் கோரியுள்ளார்.

தற்போது குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டுச் சிறைத்தண்டனை அனுபவித்து வரும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் மூன்றாவது பிரதிவாதியான ஹயாத்து மொஹமட் மில்ஹான், ஆறாவது பிரதிவாதியான மொஹமட் ரிஸ்கான் மற்றும் பத்தாவது பிரதிவாதியான செய்னூல் ஆப்தீன் ஆகியோரிடமே வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்ள அனுமதி கோரப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் 22ஆம் திகதி முதல் நவம்பர் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சிறைச்சாலைக்குச் சென்று அவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களைப் பதிவு செய்வதற்கு, நீதிமன்றத்தினால் பெயர் குறிப்பிடப்பட்ட எட்டு விசாரணை அதிகாரிகளுக்கு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக நீதிமன்ற ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்டியன் தேவாலயம், கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், மட்டக்களப்பு சியோன் தேவாலயம், தெஹிவளை ஹோட்டல் மற்றும் கொழும்பிலுள்ள கிங்ஸ்பரி, ஷங்ரிலா, சினமன் கிராண்ட் ஹோட்டல்கள் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.

இந்தத் தாக்குதல்களுக்கான சதித்திட்டம் தீட்டியமை, உடந்தையாகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 15 பிரதிவாதிகளுக்கு, 200 முதல் 260 ஆண்டுகள் வரையான சிறைத்தண்டனையை கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி விதித்தது.

சுமார் ஆறு ஆண்டுகள் நீடித்த வழக்கு விசாரணையின் பின்னர், நவரத்ன மாரசிங்க, ராமநாதன் கண்ணன் மற்றும் சுஜீவ நிஷ்ஷங்க ஆகிய நீதிபதிகள் அடங்கிய மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை ஏகமனதாக அறிவித்தது.

மொஹமட் அன்வர் மொஹமட் ரிஸ்கான் (அபு தாரிக்), மொஹமட் மன்சூர் மொஹமட் சனஸ்தீன் (அபு மிசான்), ஹுசைனூல் ரிஸ்வி காலித் சமீர், மொஹமட் ஹனீபா செய்னூல் ஆப்தீன் (அபு ஹினா) மற்றும் கச்சி மொஹமட் ஜெஸ்மின் ஆகியோருக்கு தலா 200 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நவ்பர் எனும் நவ்பர் மௌலவி, மொஹமட் ரமீஷ் மொஹமட் சாரிக், அப்துல் லத்தீப் மொஹமட் சாஃபி (சாஃபி மௌலவி / அபூ ஃபுர்கான்), மொஹமட் முஸ்தபா மொஹமட் ஹாரிஸ் (அபு நன்ஜியார்) மற்றும் ரஸிக் ராஸா ஹுசைன் ஆகியோருக்கு தலா 220 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மொஹமட் சரிபூ ஆதம் லெப்பை (அபூ ஹதீக்) எனும் கஃபூர் மாமா, ஹயாத்து மொஹமட் மில்ஹான் (அபு சிலா), மொஹமட் இப்ராஹிம் சாதிக் அப்துல்லா (அபு உமர்) மற்றும் மொஹமட் இப்ராஹிம் அப்துல் ஹக் (அபூ ஃபலா) ஆகியோருக்கு தலா 240 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அப்துல் மனாஃப் மொஹமட் பிரிதவுஸ் என்பவருக்கு 260 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேலும், குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகளுக்குச் சொந்தமான அனைத்து அசையும் மற்றும் அசையாச் சொத்துக்களையும், தீர்ப்பு அறிவிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டு செப்டெம்பர் 22ஆம் திகதி முதல், பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய அரசுடைமையாக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டிருந்தது.

சவாலுக்குட்படுத்தப்பட்ட தீர்ப்பு

கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக இரண்டு நூற்றாண்டுகளுக்கும் அதிகமான காலம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள், தங்களுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்துள்ளனர்.

தங்களுக்கு எதிராகக் கொழும்பு மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தில் நாளாந்தம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கில், நீதிபதிகள் தங்களது தரப்பு வாதங்களை முறையாகக் கவனத்தில் கொள்ளவில்லை என்றும், வெளிப்படையானதும் நியாயமானதுமான விசாரணையை முன்னெடுக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்டத்தின் முன் முறையாக நிரூபிக்க முடியாத சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்டு தங்களைக் குற்றவாளிகளாகத் தீர்ப்பளித்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர்கள், மூத்த சட்டத்தரணிகள் குழுவின் உதவியுடன் ஒக்டோபர் 8ஆம் திகதி உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.