—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணை

செம்மணி விவகாரத்தில் சர்வதேச விசாரணை

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் ராஜ் சோமதேவா தொடர்பாகவும் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாகவும் நாடாளுமன்றத்தில் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நஞ்சு, அபின் மற்றும் அபாயகரமான போதைப்பொருட்கள் தொடர்பான திருத்தச் சட்டமூலம் மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது, நேற்று வியாழக்கிழமை உரையாற்றிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பேராசிரியர் ராஜ் சோமதேவா ஒரு சிங்கள பௌத்த தேசியவாதி எனக் குறிப்பிட்டதுடன், அவர் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைவாகச் செயற்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பாக ராஜ் சோமதேவா சமர்ப்பித்த அறிக்கையின் 17ஆவது பக்கத்தைச் சுட்டிக்காட்டிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அதில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகள் குறித்துக் கேள்வி எழுப்பினார். மனித எச்சங்கள் தொடர்பான விடயத்தில் உடல்நலப் பிரச்சினை அல்லது விபத்து காரணமாக மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருதுகோள் முன்வைக்கப்பட்டிருப்பது குறித்தும் அவர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

செம்மணி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே மூன்று அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், 1999ஆம் ஆண்டு ராஜன் ஹூல் மற்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியோரால் முன்வைக்கப்பட்ட அறிக்கை தொடர்பான விடயங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் கிழக்கு மாகாண தொல்லியல் குழுவில் பேராசிரியர் ராஜ் சோமதேவா நியமிக்கப்பட்டிருந்தமை தொடர்பாகவும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கருத்துத் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் உண்மைகளைக் கண்டறிவதற்காக சர்வதேச குற்றவியல் விசாரணை அவசியம் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினார். இதுவரையில் சுமார் 600 மனித உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் சுமார் 600 உடல்கள் அங்கு இருக்கக்கூடும் எனக் கருதப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.