செம்மணி அறிக்கை மீது சர்ச்சை

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பில் தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்துள்ள நான்காவது அறிக்கை உண்மைக்குப் புறம்பானது என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நான்காவது அறிக்கையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோய்களால் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தைத் தாம் முற்றாக நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிய சர்வதேச நிபுணர்களைக் கொண்டு ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற நஞ்சு, அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் திருத்தச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றியபோதே கவீந்திரன் கோடீஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், செம்மணி மனிதப் புதைகுழியில் புதைக்கப்பட்ட தமிழர்களின் உடல்கள் தொடர்பான நீதிசார் விசாரணைகளை முடக்கும் செயற்பாடாகவே தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையைத் தாம் பார்ப்பதாகக் குறிப்பிட்டார்.
உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக அல்லது உள்நாட்டைச் சேர்ந்த நபர்களால் முன்னெடுக்கப்படும் ஆய்வுகள் திருப்திகரமானதாக அமையாது எனத் தாம் ஆரம்பத்திலிருந்தே சுட்டிக்காட்டி வருவதாகவும், சர்வதேச விசாரணை நடத்தப்படுவதுடன் சர்வதேச நிபுணர்களைக் கொண்டு மனிதப் புதைகுழிகள் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சி தொடர்பான 2025–2026ஆம் ஆண்டுக்கான இடைக்கால அறிக்கை, தொல்லியல் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவாவினால் வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அந்த அறிக்கையில் உண்மைக்குப் புறம்பான விடயங்கள் உள்ளதாகத் தெரிவித்தார்.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நான்காவது அறிக்கையில் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும், ஆரம்ப அறிக்கைகளில் இடம்பெற்ற தகவல்களும் செயற்பாடுகள் தொடர்பான குறிப்புகளும் திட்டமிட்ட வகையில் மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில், புதைகுழியில் அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூடுகள் இயற்கை அனர்த்தங்களினாலோ தொற்றுநோய்களினாலோ உயிரிழந்தவர்களுடையதாக இருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதனை உண்மைக்குப் புறம்பான அறிக்கையாகவே தாம் கருதுவதாகவும் கூறினார்.
ராஜ் சோமதேவா தொல்லியல் ஆய்வாளரே தவிர, மருத்துவம், தடயவியல், மானுடவியல் அல்லது உடற்கூற்றுப் பரிசோதனை தொடர்பான நிபுணர் அல்லர் எனக் குறிப்பிட்ட கோடீஸ்வரன், தனது ஆய்வுப் பணியின் வரம்புகளைத் தாண்டி அவர் அறிக்கையில் கருத்துகளை முன்வைத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.
முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் சாதாரண தடயங்களுக்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்றும், இது குற்றம் தொடர்பான விவகாரம் என்பதால் குற்றவியல் சம்பவ இடமாகக் கருதியே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
ஆனால், நான்காவது அறிக்கையில் அதற்கு மாறான கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
செம்மணி மனிதப் புதைகுழி முதலில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான ஆய்வாக முன்னெடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போது உண்மையை மறைத்து சர்வதேசத்தை ஏமாற்றும் நோக்கில் போலியான அறிக்கைகள் ஊடாகச் சதி இடம்பெறுவதாகத் தாம் சந்தேகிப்பதாகத் தெரிவித்தார்.
செம்மணி மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதி இந்து மயானமாக இருந்ததாகவும், அங்கு உடல்கள் வித்தியாசமான முறையில் புதைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
அப்பகுதியில் 600 இற்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சோமரத்ன ராஜபக்ஷ தெரிவித்திருந்ததாகவும் அவர் கூறினார்.
இதுவரை அகழ்வுப் பணிகளின்போது 572 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கோடீஸ்வரன், தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவை 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் புதைக்கப்பட்டவை அல்ல என்றும், 50 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டவையாக இருக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் கருத்து எவ்வாறு உண்மையாக இருக்க முடியும் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அகழ்வுப் பணிகளின்போது நாணயங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளுக்குரியவை என்றும் குறிப்பிட்ட அவர், அந்த நாணயங்கள் தொடர்பான தகவல்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினார்.
அதேபோன்று, உடல்கள் புதைக்கப்பட்ட விதம், ஆரம்பத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் காணப்பட்ட நிலைமை மற்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் ஆகியவற்றுக்கு இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். பல விடயங்கள் மறைக்கப்பட்டே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.
அகழ்வுப் பணிகளின்போது சப்பாத்து அணிந்த சிறுவர்கள், வயோதிபர்கள், சிறிய குழந்தைகள் மற்றும் பாடசாலை மாணவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாகவும், அவர்களுடைய சப்பாத்துகள் மற்றும் செருப்புகள் மீட்கப்பட்டதாகவும் கோடீஸ்வரன் குறிப்பிட்டார்.
அவற்றின் புகைப்படங்களும் எடுக்கப்பட்டிருந்ததாகவும், பாடசாலைப் பைகள் மற்றும் ஆடைகளும் அங்கு காணப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இவ்விடயங்கள் அறிக்கையில் இடம்பெறவில்லை எனவும், அதேவேளை உடல்கள் 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு முன்னர் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இது முன்னுக்குப் பின் முரணான கருத்தாக இருப்பதாகவும், தமிழ் மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயற்பாடாகத் தாம் கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், உள்நாட்டு நிபுணர்களுடன் சர்வதேச நிபுணர்களையும் இணைத்து ஆய்வுகளை முன்னெடுக்க வேண்டும் என்றார். இதுவரை 65 சதவீதமான பகுதியில் மட்டுமே உடல்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள 35 சதவீதமான பகுதியில் 1,200 இற்கும் மேற்பட்ட உடல்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ஷ, 1995 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் குறித்த பகுதியில் இராணுவச் சிப்பாயாகப் பணியாற்றியவர் என்றும், சம்பவத்தை நேரடியாகக் கண்டவர் என்றும் கோடீஸ்வரன் தெரிவித்தார். அவர் சாட்சியமளித்துள்ளதாகவும், தற்போது மீண்டும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
குறித்த காலப்பகுதியில் இடம்பெற்ற படுகொலைகளை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் பகுதியில் 600 இற்கும் மேற்பட்ட உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சோமரத்ன ராஜபக்ஷ கூறியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். எனினும், இயற்கை அனர்த்தம் அல்லது தொற்றுநோயால் உயிரிழந்தவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகம் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது மக்களையும் சர்வதேசத்தையும் ஏமாற்றும் செயற்பாடாக இருக்கலாம் எனத் தமிழ் மக்கள் சந்தேகிப்பதாகவும் அவர் கூறினார்.
எஞ்சியுள்ள 35 சதவீதமான பகுதியையும் ஆய்வு செய்வதற்கு அரசாங்கம் சர்வதேச ஒத்துழைப்புடன் வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்கான கடமையும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
பட்டலந்த படுகொலை தொடர்பான விடயங்களில் கடந்தகால அரசாங்கங்களின் ஆட்சிக்காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் குறித்து ஆய்வுகள் முன்னெடுக்கப்படுவதுடன், செம்மணி விவகாரத்தில் எஞ்சியுள்ள பகுதிகள் தொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ஷ, சந்திரிகா மற்றும் பிரேமதாஸ ஆகியோரின் ஆட்சிக்காலங்களில் படுகொலைகள் இடம்பெற்றதாகக் குற்றஞ்சாட்டிய கோடீஸ்வரன், இந்த விடயங்கள் தொடர்பில் தற்போதைய அரசாங்கத்துக்கும் பொறுப்புகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழினப் படுகொலையை மறைப்பதற்கான முயற்சியாக இது இருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவுவதாக அவர் தெரிவித்தார்.
இறுதியாக, பேராசிரியர் ராஜ் சோமதேவா சமர்ப்பித்துள்ள அறிக்கை கேள்விக்குரியதாக இருப்பதாகக் குறிப்பிட்ட கோடீஸ்வரன், முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாவது அறிக்கைகளில் மனிதப் புதைகுழி எனக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், நான்காவது அறிக்கையில் அந்த விடயம் சுட்டிக்காட்டப்படவில்லை எனத் தெரிவித்தார்.
எனவே, இந்த அறிக்கை திட்டமிடப்பட்ட செயற்பாடாகவும் சர்வதேசத்தை ஏமாற்றும் முயற்சியாகவும் இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிட்ட அவர், செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் அரசாங்கம் உரிய, நீதியான விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Comments 0
Be the first to comment.