—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

உலக சந்தையில் 7.63% சரிந்த கச்சா எண்ணெய் விலை

உலக சந்தையில் 7.63% சரிந்த கச்சா எண்ணெய் விலை

மத்திய கிழக்கில் நிலவும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடர்பில் சாதகமான அறிகுறிகள் தென்பட்டதைத் தொடர்ந்து, உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று (02) 7 சதவீதத்திற்கும் அதிகமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, சர்வதேச சந்தையில் பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெயின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 8.66 அமெரிக்க டொலர்கள் குறைந்து, 7.63 சதவீத வீழ்ச்சியுடன் 104.77 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

அதேவேளை, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) ரக கச்சா எண்ணெயின் விலையும் 7.36 சதவீதம் வீழ்ச்சியடைந்து, பீப்பாய் ஒன்றுக்கு 96.46 அமெரிக்க டொலர்களாகக் குறைந்துள்ளது.

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மீண்டும் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதே இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், நாட்டின் உயர்மட்டத் தலைமை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க அரசாங்கத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டாரின் மத்தியஸ்த முயற்சிகள் ஊடாக அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஈரான் தெரிவித்துள்ளதுடன், கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் ஹோமுஸ் நீரிணையை மீண்டும் திறப்பது தொடர்பிலும் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ், ஈரானிய தேசிய பாதுகாப்பு அதிகாரி மொஹ்சென் ரெசாயிக்கு புதிய பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பல மாதங்களுக்குப் பின்னர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் ஈரானுடன் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளை முன்னெடுத்துள்ளமை, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் முக்கிய நகர்வாகக் கருதப்படுகிறது.

எனினும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உடன்பாடு இதுவரை எட்டப்படவில்லை. இதற்கிடையில், இன்று (03) காலை அமெரிக்கா ஈரானின் கெஷ்ம் தீவு பகுதியில் தாக்குதல் நடத்தியதாக வெளியான தகவலைத் தொடர்ந்து, எண்ணெய் விலைகள் மீண்டும் சிறிதளவு அதிகரித்துள்ளன.

இதனால் மத்திய கிழக்கின் நிலைமை உலக எண்ணெய் சந்தையில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.