ஊடகவியலாளர்களுக்கு நீதி உறுதி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடந்த காலங்களில் படுகொ**லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளான ஊடக நிறுவனங்கள் தொடர்பான விசாரணைகளை உடனடியாக ஆரம்பிப்பது குறித்து, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் யாழ்ப்பாண ஊடக அமையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் விரைவில் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தருவதாகப் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உறுதியளித்துள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு இன்று திங்கட்கிழமை விஜயம் மேற்கொண்ட பிரதி அமைச்சர், யாழ். ஊடக அமையத்துக்கு வருகை தந்து அங்கிருந்த ஊடகவியலாளர்களுடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
இதன்போது, வடக்கு – கிழக்கில் படுகொ**லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள் தொடர்பில் எவ்வித இழுபறியும் இன்றி உடனடி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஊடகவியலாளர்கள் முன்வைத்தனர்.
ஊடகவியலாளர்களின் கோரிக்கைகளுக்குப் பதிலளித்துப் பேசிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், தற்போதைய அரசாங்கம் தெற்கு ஊடகவியலாளர்கள் அல்லது வடக்கு ஊடகவியலாளர்கள் என்ற இன, பிரதேச பாகுபாடுகளுடன் செயற்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
கடந்த கால ஆட்சியாளர்களைப் போல் அல்லாமல், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தும் வகையில் எவரும் எதிர்பார்த்திராத நீதியான தீர்ப்புகள் தற்போதைய ஆட்சியில் வெளிவந்து கொண்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த காலங்களில் படுகொ**லை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் தொடர்பான விவகாரங்களில் தமது அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் நிச்சயம் நீதி பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்த அவர், அதற்குத் தேவையான கால அவகாசத்தை வழங்குமாறு ஊடக சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.
ஊடகவியலாளர்களின் பிரதான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றைச் சமர்ப்பிக்குமாறும், அதனைப் பெற்று ஜனாதிபதி மற்றும் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் நேரடிப் பேச்சுவார்த்தைக்கான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தச் சந்திப்பில் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளரும் யாழ். மாநகர சபை உறுப்பினருமான கபிலன் சுந்தரமூர்த்தி மற்றும் பிரதேச ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

Comments 0
Be the first to comment.