கிராமசேவையாளர் தாக்குதல் வழக்கில் திருப்பம்

கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் கிளிநொச்சியில் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த கிராம சேவையாளரைத் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில், அவருக்கு எதிரான குற்றப்பத்திரம் இன்று திறந்த நீதிமன்றில் வாசித்துக் காட்டப்பட்டது.
கடமையில் இருந்த கிராம சேவையாளரைத் தாக்கியமை மற்றும் கடமையில் இருந்த அரச ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகள் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருந்த அவருக்கு வாசித்துக் காட்டப்பட்டன.
இரண்டு குற்றச்சாட்டுகளிலும் தான் குற்றமற்றவர் என அவர் நீதிமன்றில் தெரிவித்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை எதிர்வரும் பெப்ரவரி 18ஆம் திகதி பிற்பகலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் திகதி நிர்ணயித்தது.
கிளிநொச்சி நீதிவான் கிருஷாந்தன் முன்னிலையில் இன்று பிற்பகல் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் திகதி நிர்ணயிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட கிராம சேவையாளரின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.
இந்த வழக்கு இந்த ஆண்டு ஆரம்பத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு பொலிஸாருக்கு ஒன்பது மாத கால அவகாசம் வழங்கி நீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்திருந்தது.
எனினும், கடந்த செப்டெம்பர் 28ஆம் திகதி, ஒன்பது மாதங்களுக்குப் பின்னர் வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, பொலிஸார் வழக்குத் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் நீதிமன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இதையடுத்து, இந்த விடயத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதிமன்றம், மூன்று வார கால அவகாசம் வழங்கி வழக்கை இன்றைய தினத்துக்கு ஒத்திவைத்திருந்தது.
இன்று வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுக்கு எதிராக இரண்டு குற்றச்சாட்டுகள் அடங்கிய குற்றப்பத்திரத்தைப் பொலிஸார் நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தனர்.

Comments 0
Be the first to comment.