—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

எரிபொருள் மானியங்களை நேரடியாக வழங்கக் கோரிக்கை

எரிபொருள் மானியங்களை நேரடியாக வழங்கக் கோரிக்கை

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாகவே எரிபொருள் மானியங்களை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்குப் பதிலாக, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக அரசாங்கம் எரிபொருள் மானியங்களை நேரடியாக வழங்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அவர், டொலர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி வெளிநாட்டு எரிபொருள் விநியோக நிறுவனங்கள் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார்.

எனினும், அரசாங்கத்தின் மானியப் பயன்கள் அந்த நிறுவனங்களுக்குச் சாதகமாக அமையும் வகையில் வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் கூறினார்.

வெளிநாட்டு நிறுவனங்கள் தமது சொந்த டொலர்களை முதலீடு செய்து இலாபம் ஈட்டுவதில் ஆட்சேபனை இல்லை எனத் தெரிவித்த அவர், நாட்டின் வளமான பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தைப் பலவீனப்படுத்தி வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பது தவறான பொருளாதார நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டினார்.

நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், பணப்புழக்கம் மற்றும் வருமானப் பற்றாக்குறை காரணமாக மக்கள் தங்களது சொத்துகள் மற்றும் நகைகளை அடகு வைக்கும் நிலை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தற்போதைய பொருளாதார முகாமைத்துவத்தின் போதாமையை வெளிப்படுத்துவதாகவும் குறிப்பிட்டார்.

அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக மக்கள் கடன் அட்டைகள் மற்றும் குத்தகை முறைகளை அதிகளவில் நாடி வருவதாகவும், எதிர்கால வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு இவ்வாறு கடன் பெறுவது ஒட்டுமொத்தப் பொருளாதாரத்துக்கும் ஆபத்தானது எனவும் ரவி கருணாநாயக்க கூறினார்.

சர்வதேச அமைப்புகள் நாட்டின் பொருளாதாரம் இன்னும் பலவீனமான நிலையில் இருப்பதாக எச்சரித்து வருவதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் கடுமையான நிதி ஒழுக்கத்தைப் பேண வேண்டும் என வலியுறுத்தினார்.

சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும்போது தேசிய இறையாண்மையையும் மக்களின் நலன்களையும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். வரிகளை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், விரைவான பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.