—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

நாட்டில் வெள்ள அனர்த்தம்: 12 பேர் ப**லி

நாட்டில் வெள்ள அனர்த்தம்: 12 பேர் ப**லி

வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மற்றும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மிகப் பலத்த மழை பெய்து வருகின்றது.

இதனால் ஏற்பட்ட சீரற்ற காலநிலை மற்றும் வெள்ள அனர்த்தங்கள் காரணமாக இதுவரை 12 பேர் உ**யிரிழந்துள்ளதுடன், ஒருவர் காணாமல்போயுள்ளார்.

மேலும், 25 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திப்பவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளது. கேகாலை, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பதிவாகியுள்ளது. மாதம்பை – மெல்லவாகார வீதியிலுள்ள களு அத்துர வான்கதவுப் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஒருவர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

நாட்டின் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 206 பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் 2,826 குடும்பங்களைச் சேர்ந்த 10,311 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நாடளாவிய ரீதியில் 28 வீடுகள் முழுமையாகவும், 1,807 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட 23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேர் மூன்று பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழை காரணமாகக் களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், இரத்தினபுரி மற்றும் நாவலப்பிட்டியின் தாழ்நிலப் பகுதிகளில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இரத்தினபுரியில் களு கங்கையின் நீர்மட்டம் 7 அடியைத் தாண்டியதால் தாழ்நிலப் பகுதிகளும் வீதிகளும் நீரில் மூழ்கியுள்ளன.

அத்துடன், களனி கங்கை மற்றும் அத்தனகலு ஓயா ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் அபாயகரமாக உயர்ந்து வருவதால், கம்பஹாவின் தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரத்தினபுரி – பாணந்துறை ஏ-8 பிரதான வீதியில் மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்துத் தடை ஏற்பட்டது. பின்னர், பொலிஸார் மற்றும் பிரதேச மக்களால் அவை அகற்றப்பட்டு போக்குவரத்து சீர்செய்யப்பட்டது.

மழைநீரைக் கட்டுப்படுத்தும் நோக்கில், நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 14 பிரதான நீர்த்தேக்கங்கள் வான்பாய்ந்து வருகின்றன.

குகுலே கங்கை, பொல்கொல்ல, விமலசுரேந்திர, லக்ஷபான, மேல் கொத்மலை, தெதுரு ஓயா, இராஜாங்கனை மற்றும் கலா வாவி உள்ளிட்ட முக்கிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றது.

விக்டோரியா மற்றும் காசல்ரீ நீர்த்தேக்கங்களும் அவற்றின் அதிகபட்சக் கொள்ளளவை எட்டியுள்ளதால், ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அவசர அனர்த்த சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனடியாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.