—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

எரிவாயு சிலிண்டர்கள் மறைப்பு: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமையல் எரிவாயு சிலிண்டர்கள் கையிருப்பில் இருந்தபோதிலும், எரிவாயு இல்லை எனக் கூறி நுகர்வோருக்கு விற்பனை செய்ய மறுத்து அவற்றை மறைத்து வைத்திருந்த கண்டிப் பகுதியைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவருக்கு கண்டி நீதவான் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

அத்துடன், சோதனை நடவடிக்கையின்போது கைப்பற்றப்பட்ட 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களையும் முழுமையாக அரசுடைமையாக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கண்டி, கொட்டுகொடெல்ல வீதியில் இலக்கம் 124 இல் அமைந்துள்ள ‘D.D. Gurusinghe Trading’ என்ற பெயரிலான லிட்ரோ எரிவாயு விற்பனை முகவர் நிலையத்திலேயே இந்தச் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நுகர்வோரிடமிருந்து கிடைத்த தொடர்ச்சியான முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் (CAA) கண்டி மாவட்ட விசாரணை அதிகாரிகள் கடந்த ஒக்டோபர் 29ஆம் திகதி குறித்த விற்பனை நிலையத்தில் விசேட சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் அதிகாரி ஒருவர் ரகசியக் கொள்வனவாளராகச் சென்று 12.5 கிலோகிராம் நிறையுடைய லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்றைக் கொள்வனவு செய்யக் கோரியுள்ளார்.

இதற்கு, கடையில் எரிவாயு சிலிண்டர்கள் எதுவும் இல்லை எனக் கூறிய வர்த்தகர், விற்பனை செய்ய மறுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, அதிகாரிகள் குறித்த வர்த்தக நிலையத்தைச் சோதனையிட்டபோது, அங்கு 12.5 கிலோகிராம் நிறையுடைய 28 லிட்ரோ எரிவாயு சிலிண்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து, அனைத்து சிலிண்டர்களையும் வழக்குப் பொருட்களாகக் கைப்பற்றிய அதிகாரிகள், கண்டி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

நீதிமன்ற விசாரணைகளின் முடிவில், அத்தியாவசியப் பொருட்களை மறைத்து வைத்து நுகர்வோரை ஏமாற்றிய குற்றத்திற்காக வர்த்தகருக்கு அபராதம் விதித்த நீதவான், கைப்பற்றப்பட்ட 28 எரிவாயு சிலிண்டர்களையும் மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைக்காமல் முழுமையாக அரசுடைமையாக்குமாறு உத்தரவிட்டார்.

2003ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபைச் சட்டத்தின் 16(அ) பிரிவின்படி, விற்பனைக்காகப் பொருட்களைத் தமது பொறுப்பில் வைத்துக்கொண்டு, அவை தம்மிடம் இல்லை என நுகர்வோரிடம் கூறுவது சட்டவிரோதச் செயலாகும்.

பொருட்களை மறைத்து வைத்தல் மற்றும் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி நுகர்வோரை அசௌகரியத்திற்கு உள்ளாக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்புகளும் விசாரணைகளும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை எச்சரித்துள்ளது.

பொதுமக்கள் இதுபோன்ற சட்டமீறல்கள் மற்றும் அநீதியான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற குறுந்தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.