மயிலத்தமடு விவகாரத்தில் அமைச்சருக்கு எதிர்ப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலப் பிரச்சினைக்குத் தீர்வு கோரியும், நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தியும் கடந்த நவம்பர் 2ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பாக, அமைச்சர் சந்திரசேகரன் நேற்று (3) நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம் வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளது.
குறித்த போராட்டத்தை வடக்கு–கிழக்கைச் சேர்ந்த தோல்வியடைந்த, கேடுகெட்ட, சுத்துமாத்து அரசியல்வாதிகள் முன்னெடுத்ததாகவும், அதனை அரசியல் நோக்கங்களுடன் தொடர்புபடுத்தியும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருப்பது, போராட்டத்தை ஏற்பாடு செய்த சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பையும், அதில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் கொச்சைப்படுத்துவதாக அமைந்துள்ளதாக ஒன்றியம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடர்பில் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தப் போராட்டம் எந்தவொரு அரசியல் கட்சியினாலோ அல்லது அரசியல்வாதிகளினாலோ ஏற்பாடு செய்யப்பட்டதல்ல. கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியத்தின் அழைப்பின் பேரில் 14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து திட்டமிட்டு ஏற்பாடு செய்து முன்னெடுத்த மக்கள் போராட்டமாகும்.
இப்போராட்டத்தில் அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் அனைத்து மக்கள் பிரதிநிதிகள், விவசாய அமைப்புகள், கால்நடை வளர்ப்பாளர் அமைப்புகள், மீனவர் சங்கங்கள், மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்குமாறு திறந்த அழைப்பு விடுக்கப்பட்டது. அதன் அடிப்படையிலேயே பல்வேறு இன, மத, மொழி மற்றும் சமூகப் பின்னணிகளைக் கொண்ட மக்கள் இதில் பங்கேற்றனர்.
இன, மத வேறுபாடுகளைக் கடந்த மக்கள் போராட்டம்
நவம்பர் 2ஆம் திகதி மட்டக்களப்பில் நடைபெற்ற இப்போராட்டத்தில் தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும், பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்களும், சமூக அமைப்புகளும், மதத் தலைவர்களும், விவசாயிகளும், பொதுமக்களும் ஒன்றிணைந்து பங்கேற்றமை மிக முக்கியமான சிறப்பம்சமாகும்.
இன, மத, மொழி மற்றும் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து, பொதுவான நீதிக் கோரிக்கையின் அடிப்படையில் மக்கள் ஒன்றிணைந்தனர். இது ஒரு குறிப்பிட்ட இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது அரசியல் தரப்பிற்கோ உரிய போராட்டம் அல்ல.
அனைத்து மக்களினதும் உரிமைகள், வாழ்வாதாரம், சட்டத்தின் ஆட்சி மற்றும் நீதியை வலியுறுத்திய மக்கள் போராட்டமாகும்.
இத்தகைய பரந்துபட்ட மக்கள் பங்கேற்பைச் சாத்தியமாக்கியது சிவில் சமூகத்தின் சுயாதீனமான ஒருங்கிணைப்பும், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையுமேயாகும்.
அரசியல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் மக்களை ஒன்றிணைத்து, பல்வேறு சமூகங்களுக்கிடையே பொதுவான பிரச்சினைகள் தொடர்பாக ஒற்றுமையையும் கூட்டுச் செயற்பாட்டையும் உருவாக்குவதில் சிவில் சமூகத்தின் முக்கியத்துவத்தை இந்தப் போராட்டம் வெளிப்படுத்தியுள்ளது.
சிவில் சமூகத்தின் பலம் என்பது ஒரு குறிப்பிட்ட அரசியல் தரப்பையோ அல்லது இனத்தையோ பிரதிநிதித்துவப்படுத்துவதில் இல்லை. மாறாக, அனைத்து மக்களையும் நீதிக்காகவும் பொதுநலனுக்காகவும் ஒன்றிணைப்பதிலேயே உள்ளது. நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற போராட்டம் இதற்கான தெளிவான எடுத்துக்காட்டாகும்.
எனவே, இவ்வாறான பன்மைத்துவ மக்கள் போராட்டத்தை அரசியல் கட்சிகளின் போராட்டமாகவோ அல்லது இனவாதப் போராட்டமாகவோ சித்தரிப்பது, அதில் பங்கேற்ற பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களின் உண்மையான பங்களிப்பையும் ஒற்றுமையையும் மறுதலிப்பதாகும்.
போராட்டத்தின் அடிப்படை மற்றும் உண்மையான நோக்கங்கள்
- மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாத்தல்.
- நீதிமன்றத் தீர்ப்பை உடனடியாக நடைமுறைப்படுத்தக் கோருதல்.
- கால்நடை வளர்ப்பாளர்களின் வாழ்வாதார உரிமைகளைப் பாதுகாத்தல்.
- கால்நடைகள் மீதான தாக்குதல்களையும் பண்ணையாளர்கள் மீதான அச்சுறுத்தல்களையும் நிறுத்துதல்.
- கிழக்கு மாகாணத்தின் மேய்ச்சல் நிலங்களைப் பாதுகாப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை உறுதிப்படுத்துதல்.
இவை எந்தவொரு இனத்திற்கோ, மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ எதிரான கோரிக்கைகள் அல்ல. சட்டத்தின் ஆட்சி, நீதிக்கான உரிமை, வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்ட பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளாகும்.
ஒரு பொறுப்புவாய்ந்த அமைச்சராக, மக்கள் மத்தியில் எழுந்துள்ள பிரச்சினைகளையும் அவற்றுக்காக சிவில் சமூக அமைப்புகள் முன்னெடுக்கும் ஜனநாயக ரீதியான போராட்டங்களையும் மதித்து அணுக வேண்டியது அவசியமாகும். மாறாக, இத்தகைய மக்கள் போராட்டங்களுக்கு அரசியல் சாயம் பூசி, அவற்றின் உண்மையான நோக்கத்தைத் திசைதிருப்புவது ஏற்றுக்கொள்ள முடியாததாகும்.
குறிப்பாக, மயிலத்தமடு–மாதவனைப் பிரச்சினை நீண்டகாலமாகத் தீர்வின்றித் தொடரும் நிலையில், அதற்கான நீதியான தீர்வை வலியுறுத்தி பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து குரலெழுப்பியிருப்பதை அரசியல் நோக்கத்துடன் சித்தரிப்பது, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையையும் நல்லிணக்கத்தையும் பாதிக்கக்கூடியதாகும்.
மேலும், இந்தப் போராட்டத்தை இனவாதப் போராட்டமாகச் சித்தரிப்பதற்கான எந்தவொரு முயற்சியையும் தாம் நிராகரிப்பதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது. மேய்ச்சல் நிலப் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பாளர்களின் உரிமைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைப்படுத்துதல் ஆகியவை இனவாதக் கோரிக்கைகள் அல்ல. அவை சட்டத்தையும் நீதியையும் மதிக்கும் எந்தவொரு குடிமகனும் ஆதரிக்கக்கூடிய பொதுவான உரிமைக் கோரிக்கைகளாகும்.
அமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
- நவம்பர் 2ஆம் திகதி நடைபெற்ற மக்கள் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வெளியிட்ட கருத்துக்களை மீளாய்வு செய்து, அவற்றை உடனடியாக மீளப்பெற வேண்டும்.
- 14 சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தின் உண்மையான ஏற்பாட்டாளர்களையும் அதன் நோக்கங்களையும் பகிரங்கமாக அங்கீகரிக்க வேண்டும்.
- சிவில் சமூக அமைப்புகளின் சுயாதீனமான செயற்பாடுகளையும் மக்களின் ஜனநாயகப் போராட்ட உரிமையையும் மதித்து நடக்க வேண்டும்.
- மயிலத்தமடு–மாதவனைப் பிரச்சினைக்கு அரசியல் சாயமின்றி, சட்டத்தின் அடிப்படையில் உடனடித் தீர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எமது நிலைப்பாடு தெளிவானது!
சிவில் சமூகத்தின் குரலை அரசியல் குரலாக மாற்றிவிட முடியாது. மக்களின் நியாயமான கோரிக்கைகளை இனவாதக் கோரிக்கைகளாகச் சித்தரித்துவிட முடியாது.
14 சிவில் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து முன்னெடுத்த மக்கள் போராட்டத்தை எந்தவொரு அரசியல் அடையாளத்திற்குள்ளும் முடக்கிவிட முடியாது.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் ஒன்றிணைந்து பங்கேற்ற இந்தப் போராட்டம், இனங்களுக்கிடையிலான ஒற்றுமைக்கும் சிவில் சமூகத்தின் சுயாதீனமான மக்கள் ஒருங்கிணைப்புக்கும் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
அமைச்சரின் நாடாளுமன்றக் கருத்து, சிவில் சமூகத்தின் இத்தகைய ஜனநாயகப் பங்களிப்பைக் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளமையால் அதனை வன்மையாகக் கண்டிப்பதாக ஒன்றியம் தெரிவித்துள்ளது.
மக்களின் உரிமைகளுக்காகவும், நீதிக்காகவும், வாழ்வாதாரப் பாதுகாப்பிற்காகவும் தமது சிவில் சமூகப் பணிகள் தொடரும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையை வெளியிட்டவர்:
அருட்தந்தை ம. லூக்ஜோன்
ஒருங்கிணைப்பாளர்
கிழக்கு மாகாண சிவில் சமூக செயல்பாட்டாளர்கள் ஒன்றியம்.

Comments 0
Be the first to comment.