கடலுக்குச் சென்ற மூவர் மாயம்

கடற்றொழிலுக்காக முல்லைத்தீவு, மாத்தளன் கடற்பரப்புக்குச் சென்ற மூன்று மீனவர்கள் இதுவரை கரை திரும்பாத நிலையில், அவர்களைத் தேடும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு மாத்தளன் அடைக்கலமாதா கிராமிய கடற்றொழில் அமைப்பின் தலைவர் பாக்கியநாதன் பார்த்தீபன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போனவர்கள் 27, 28 மற்றும் 54 வயதுடைய மூவர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் இருவர் மாத்தளனைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றையவர் மன்னாரிலிருந்து கடற்றொழிலுக்காக மாத்தளனுக்குச் சென்றவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த மூவரும் கடந்த திங்கட்கிழமை (26) காலை 7.30 மணியளவில் மாத்தளன் கடற்பரப்பில் கடற்றொழிலுக்காகச் சென்ற நிலையில், இதுவரை கரை திரும்பவில்லை.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பாக்கியநாதன் பார்த்தீபன், காணாமல் போன மீனவர்கள் தொடர்பாக உரிய திணைக்களத்தின் ஊடாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவுக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
கடற்படையின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும், கடற்படையினர் உடனடியாகத் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, காணாமல் போன மீனவர்கள் தொடர்பான தகவல்களை வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாத பட்சத்தில் விமானப்படையின் உதவியுடனாவது தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு மீனவர்களை மீட்டுத் தர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் கடற்கரையில் காத்திருந்து அவர்களை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும், கடலில் ஏற்பட்டுள்ள கடும் சீற்றம் காரணமாகத் தங்களாலும் கடற்றொழிலுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Comments 0
Be the first to comment.