—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

பருவமழை பாதிப்புகளைக் குறைக்க நடவடிக்கை

மாவட்டத்தில் வடகீழ் பருவமழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைக் குறைப்பது தொடர்பான முன்னாயத்தக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன் தலைமையில் இன்று (29.10.2026) மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் A.M.R.N.K. அழகக்கோன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நளாயினி இன்பராஜ், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) அஜிதா பிரதீபன், பிரதேச செயலாளர்கள், மாவட்டத்திலுள்ள முப்படைகளின் உயரதிகாரிகள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அனர்த்த முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் அவசர நிலைமைகளில் செயற்பட வேண்டிய விதம் தொடர்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதுடன், முன்னேற்பாடுகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது.

அனர்த்த நிலைமைகளின்போது தேவையான உபகரணங்கள் மற்றும் படகுகளுடன் முப்படையினரும் பொலிஸாரும் மீட்புப் பணிகளுக்குத் தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

அத்துடன், அனர்த்தங்களால் மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டால், தற்காலிக தங்குமிடங்களில் உணவு, சுகாதாரம் மற்றும் குடிநீர் வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மழையினால் வீதிகளில் ஏற்படும் தடைகளை விரைவாக அகற்றுவதற்குத் துறைசார் திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்பைக் கோரியதுடன், இக்கட்டான சூழ்நிலைகளில் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க அரச சார்பற்ற நிறுவனங்களும் இணக்கம் தெரிவித்தன.

மேலும், மழைக்காலங்களில் குளங்களில் அதிகரிக்கும் நீரை வெளியேற்றுவது தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கைகளை வழங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.