கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய அம்பேவெல!
நுவரெலியா பகுதியில் பெய்த கனமழை காரணமாக, நேற்று செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் அம்பேவெல நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், கொத்மலை நீர்த்தேக்கத்துடன் சங்கமிக்கும் ஆக்ராஓயா ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெரயா மற்றும் தங்கக்கலை தோட்டங்களில் உள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதாக லிந்துல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று மதிய வேளையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கினால், ஆக்ராஓயா ஆற்றை அண்டியுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
அத்துடன், அம்பேவெல பகுதியில் பெய்த தொடர் மழையால் அம்பேவெல ரயில் நிலையப் பகுதியும், அதனை அண்டிய நுவரெலியா – அம்பேவெல – பட்டிப்பொல பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கின.
இதன் காரணமாக, குறித்த வீதியூடான வாகனப் போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் பாதிக்கப்பட்டதாக அம்பேவெல ரயில் நிலையப் பொறுப்பதிகாரி அசேந்திர திசநாயக்க தெரிவித்தார்.

Comments 0
Be the first to comment.