செம்மணிக்காக ஒன்றிணைவோம் – அருட்தந்தை அழைப்பு!

செம்மணி சித்துப்பாத்தி சமூகப் புதைகுழி தொடர்பில் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை ஏமாற்றத்தையும் பேரதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ள சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா. சத்திவேல், தமிழ்த் தேசிய மற்றும் சமூக சக்திகள் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று புதன்கிழமை (21) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
செம்மணி சித்துப்பாத்தி சமூகப் புதைகுழி தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவா நீதிமன்றத்தில் சமர்ப்பித்த இடைக்கால அறிக்கையில், உயிரிழப்புகள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளமை, உண்மையை எதிர்பார்த்துப் பல தசாப்தங்களாகக் காத்திருக்கும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும் நீதியை எதிர்பார்க்கும் ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக அருட்தந்தை மா. சத்திவேல் தெரிவித்துள்ளார்.
மேலும், பாடசாலை மாணவி கிருஷ்ணாந்தி குமாரசாமி கொ**லை வழக்கில் குற்றவாளியாகத் தண்டிக்கப்பட்ட கோப்ரல் சோமரத்தின ராஜபக்ச, செம்மணி தொடர்பில் மேலும் பல உண்மைகளைத் தெரிவிக்கத் தயாராக இருப்பதாகவும், தன்னை விசாரணைக்கு அழைக்குமாறும் கோரி பல மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதிக்குப் பல கடிதங்களை அனுப்பியிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இதுவரை விசாரணைகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கொ**ல்லப்பட்டவர்களைத் தாங்களே புதைத்ததாகக் குறித்த சாட்சி கூறியுள்ள நிலையில், இறப்புகள் தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவால் ஏற்பட்டிருக்கலாம் எனப் பேராசிரியர் ராஜ் சோமதேவா குறிப்பிட்டிருப்பது உண்மைக்குப் புறம்பானது என்றும், அதில் அரசியல் சார்ந்த சிந்தனைகள் வெளிப்படுவதாகவும் அருட்தந்தை சத்திவேல் தனது அறிக்கையில் விமர்சித்துள்ளார்.
செம்மணி சமூகப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களுடன், சிறுவர்களின் பாவனைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சான்றுப் பொருட்களும் கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றிருக்கலாம் என்பதை வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், இனப்படுகொ**லை குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கவும் படையினரைப் பாதுகாக்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாகவே பேராசிரியரின் அறிக்கையைத் தாம் பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப்படுகொ**லைகள், போர்க்குற்றங்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமை தொடர்பில் இதுவரை நீதி கிடைக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அருட்தந்தை சத்திவேல், மாற்றத்தை ஏற்படுத்துவதாகக் கூறி தமிழர்களின் வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திடமோ அல்லது எதிர்காலத்தில் அமையும் வேறு எந்த அரசாங்கத்திடமோ நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை தமக்கு இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேசத்தைச் சமாளிப்பதற்கும் ஏமாற்றுவதற்கும் நியமிக்கப்படும் ஆணைக்குழுக்களும் வழங்கப்படும் வாக்குறுதிகளும் இதுவரை எதிர்பார்த்த நீதியைப் பெற்றுத்தரவில்லை என்றும், 1983ஆம் ஆண்டு கறுப்பு ஜூலை இனப்படுகொ**லை தொடர்பான மீள் விசாரணையிலும் இதே நிலை ஏற்படலாம் என்றும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளும் சமூக சக்திகளும் ஒன்றிணைந்து சர்வதேசத்தின் கதவுகளைத் தட்ட வேண்டிய அவசியத்தைப் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை மேலும் வலியுறுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், அமைதி காப்பது என்பது அரசியல் மற்றும் சமூகப் புதைகுழிக்குள் தங்களைத் தாங்களே வீழ்த்திக்கொள்வதற்குச் சமமானது எனத் தெரிவித்துள்ள அருட்தந்தை சத்திவேல், மாவீரர் மாதத்தில் செம்மணி தொடர்பான அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது தமிழ்த் தேசிய சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார்.
மேலும், சர்வதேசத்தை நோக்கித் தமிழர்களின் குரலை மீண்டும் உயர்த்தி, தமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்றும், தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் அதற்கான மக்கள் சக்தியைத் திரட்டுவது இன்றைய கடமையும் பொறுப்புமாகும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Comments 0
Be the first to comment.