—
வேகம். உண்மை. தமிழ்.
BREAKING →

கறுப்பு ஜூலை குறித்து விசேட குழு!

கறுப்பு ஜூலை குறித்து விசேட குழு!

1983ஆம் ஆண்டின் கறுப்பு ஜூலை வன்முறைச் சம்பவங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து முழுமையான ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கும், தேசிய சகவாழ்வை உறுதிப்படுத்திப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழுவை நியமிக்கும் பிரேரணை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

பிரதி சபாநாயகர், விசேட வைத்திய நிபுணர் ரிஸ்வி சாலி தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே, எதிர்வரும் வாரத்துக்கான நாடாளுமன்ற அமர்வு நடவடிக்கைகள் இவ்வாறு திருத்தியமைக்கப்பட்டன.

நாடாளுமன்றக் குழுவின் தீர்மானங்களின்படி, எதிர்வரும் நவம்பர் 3ஆம் திகதி செவ்வாய்க்கிழமை முற்பகல் 11.30 மணிக்கு, 1983 கறுப்பு ஜூலைத் துன்பியல் சம்பவம் தொடர்பிலான விசேட குழு நியமனப் பிரேரணை சபையில் முன்வைக்கப்படும்.

அதனைத் தொடர்ந்து, அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் விசேட சபை ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினரால் கையளிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் காணப்பட்ட குறைபாடுகளை நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமையத் திருத்தியமைத்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நிர்ணயிக்கப்பட்ட கால எல்லைக்குள் திருத்தப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சியினர் சமர்ப்பிக்காத காரணத்தினால், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தவாறு நவம்பர் 3ஆம் திகதி அதனை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதில்லை என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 4ஆம் திகதி புதன்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) சட்டத்தின் கீழ் 2508/27ஆம் இலக்க வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதிகள் மற்றும் குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதம் இடம்பெறவுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பிற்பகல் 5.00 மணி முதல் 5.30 மணி வரை ஆளுங்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின்போதான பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 5ஆம் திகதி வியாழக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை நம்பிக்கைப் பொறுப்புகள் (திருத்தச்) சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இடம்பெறவுள்ளது. அரசமைப்பின் 121ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர்நீதிமன்றத்தில் எவ்வித மனுக்களும் தாக்கல் செய்யப்படாத பட்சத்தில் இந்த விவாதம் நடைபெறும்.

இதன் பின்னர், பிற்பகல் 5.00 மணி முதல் 5.30 மணி வரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் ஒத்திவைப்பு நேரத்தின்போதான பிரேரணை மீதான விவாதத்துக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 6ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை தனியார் உறுப்பினர் பிரேரணைக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

0

What do you think?

Share this story

Comments 0

Be respectful.

Be the first to comment.