கஸ்ஸப்ப தேரருடன் அரசியல் தொடர்பில்லை
கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்ட பலாங்கொட கஸ்ஸப்ப தேரருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் எவ்வித அரசியல் தொடர்பும் கிடையாது என அக்கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார்.
அதேவேளை, கஸ்ஸப்ப தேரருடனான சந்திப்பு தொடர்பான காணொளியைச் சம்பந்தப்பட்ட நட்சத்திர ஹோட்டல் நிர்வாகம் வெளியிட்டது முற்றிலும் தவறான செயல் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் 2026 ஒக்டோபர் 26ஆம் திகதி நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
“பௌத்த மதத்துக்கும் புத்தசாசனத்துக்கும் எதிரான போக்கையே தற்போதைய அரசு கடைப்பிடித்து வருகின்றது.
அரசின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே நாம் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குச் சென்றோம்.
பௌத்த தர்மத்துக்கும் புத்தசாசனத்துக்கும் ஏதேனும் அச்சுறுத்தல்கள் அல்லது பாதிப்புகள் ஏற்படும்போது, அதற்கு எதிராகக் குரல் கொடுப்பது எங்களது கடமை. அந்த அடிப்படையில் மட்டுமே விகாரமகாதேவி பூங்காவில் இடம்பெற்ற சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்கேற்றோரை நேரில் சென்று சந்தித்தோம்.
இதனைவிடுத்து, போராட்டக்காரர்களுடன் எமக்கு எவ்வித மறைமுக அரசியல் பின்னணியோ அல்லது தொடர்போ கிடையாது.
தற்போதைய அரசு திட்டமிட்ட முறையில் பௌத்த மரபுகளுக்கு எதிராகச் செயற்பட்டு வருகின்றது. தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை முற்றிலும் மறந்துவிட்டு, எதிர்க்கட்சியினருக்கு எதிரான அரசியல் பழிவாங்கல்களுக்கு மட்டுமே இந்த அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது.
பொலிஸ் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.
ராஜபக்ஷக்கள் மீது தொடர்ச்சியாகப் போலிப் புகார்களைச் சுமத்தி கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பதால் மட்டும் நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைத்துவிடாது. அரசு தனது பழிவாங்கும் அரசியலைக் கைவிட்டு, மக்கள் நலன் சார்ந்த ஆட்சியை முன்னெடுக்க வேண்டும்” என்றார்.

Comments 0
Be the first to comment.